இந்தியா

எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம் 

எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம் 

webteam

கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பெங்களூரு ரமதா ஹோட்டலில் உள்ள மைதானத்தில் சக எம்.எல்.ஏ.க்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கூட்டணியிலுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். 

ஆனால் எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. தங்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரடவிடக் கோரி முதலில் 10 எம்எல்ஏக்களும் பின்னர் 5 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இது குறித்த வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 

இதனிடையே அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் குமாரசாமிக்கு சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நாளை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை சந்திக்க, அம்மாநில முன்னாள் முதல்வரும், கர்நாடக மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா சென்றார். அப்போது ஹோட்டலில் உள்ள மைதானத்தில் சக எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடினார். 

கர்நாடகாவில் நடைபெறும் உச்சகட்ட குழப்பத்தில் எடியூரப்பா மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருவது ஆளுங்கட்சி மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.