இந்தியா

கொரோனா பாதிப்பு இல்லை.. ஆனாலும் தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்.பி..!

கொரோனா பாதிப்பு இல்லை.. ஆனாலும் தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்.பி..!

webteam

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜக எம்பி சுரேஷ் பிரபு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான முரளிதரன், மார்ச் 15-ம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள சித்ரா மருத்துவக்கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற
மத்திய அமைச்சர் முரளிதரன், டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு உடனடியாக சோதனைகள்
மேற்கொள்ளப்பட்டன. அவருக்கு, கொரோனா தொற்று இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், சில நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருப்பார்
என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக எம்பி சுரேஷ் பிரபு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த 10-ஆம்
தேதி நடைபெற்ற இரண்டாவது ஷெர்பாஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவூதி அரேபியாவுக்கு சுரேஷ் பிரபு சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து,
நாடு திரும்பிய அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த 14 நாட்களுக்கு தனது இல்லத்தில் தனிமையில் இருக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.