பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தால் நாடாளுமன்றம் முடக்கியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி நிஷிகாந்த் துபே மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹூவா மொய்த்ரா இடையே வெடித்துள்ள மோதல் புதிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மஹூவா மைக்ரா தன்னை "பிஹாரி குண்டா" என்று இழிவாகப் பேசியதாக நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியுள்ளார். புதன்கிழமை ஐடி துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள தான் சென்றிருந்தபோது, அங்கே மஹூவா மொய்த்ரா மூன்று முறை தன்னை "பிஹாரி குண்டா" என்று வர்ணித்ததாக மக்களவையில் துபே புகார் அளித்தார். இது பீகார் மாநிலத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த வட இந்தியாவையும் இழிவுபடுத்தும் செயல் என அவர் வியாழக்கிழமை பேசினார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் வழக்கம்போல தொடர் முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்த நிலையில், நிஷிகாந்த் துபே தனது புகாரை பதிவு செய்தார். ஆனால், அமளி காரணமாக அவை வியாழக்கிழமையன்றும் மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதால், இந்த விவகாரம் குறித்து விவாதம் எதுவும் நடைபெறவில்லை.
மஹூவா மொய்த்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என நிஷிகாந்த் துபே வற்புறுத்தி வரும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான மஹூவா, "ஐடி துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டமே புதன்கிழமை நடைபெறாதபோது, இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமே இல்லை" என பதிலளித்துள்ளார்.
நேற்று பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐடி துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கூட்டத்தை நடத்த முடியவில்லை என நிலைக்குழுவின் தலைவரான சசி தரூர் வருத்தம் தெரிவித்திருந்தார். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்தபோதிலும், அவர்கள் ஆலோசனையில் கலந்து கொள்ளவில்லை என்றும், தங்களுடைய வருகையை பதிவு செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹூவா மொய்த்ரா, அந்தக் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர். மக்களவையில் அரசுக்கு எதிராகவும், பாரதிய ஜனதாவுக்கு எதிராகவும் அனல் பறக்க பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். மிகுந்த துணிச்சலுடன் அரசை கடுமையான இவர் விமர்சிப்பதாக கடந்த காலங்களில் நாடாளுமன்ற எதிர்க்கட்சியினர் இவரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், நிஷிகாந்த் துபே - மஹூவா மொய்த்ரா விவகாரம் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ட்வீட்கள் மூலம் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளார்.
மக்களவையில் தினமும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் முழக்கங்களை எழுப்பி, அவையை முடக்கி வரும் நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா வியாழக்கிழமை எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவையின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும், தன்னை அந்த கட்டாயத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தள்ளுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிடும் எதிர்க்கட்சியினர், விதிகளுக்கு புறம்பாக பதாகைகளை ஏந்தி வருவதை அரசு தரப்பு சுட்டிக்காட்டி வருகிறது. அத்துடன் புதன்கிழமையன்று ஆவணங்களை பறித்து சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்தெறிந்ததால், சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சிகள் அத்துமீறல் செய்யக்கூடாது என கண்டித்துள்ளார்.
வியாழக்கிழமையன்று மக்களவையில் கேள்வி நேரமோ அல்லது எந்த விவாதங்களோ நடைபெற முடியாத அளவுக்கு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாளன்றும் மக்களவை மற்றும் அதே போலவே மாநிலங்களவை இரண்டும் முடங்கின.
ஏற்கெனவே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாந்தனு சென் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் சாந்தனு சென் மாநிலங்களவை அலுவல்களில் கலந்து கொள்ளக் கூடாது என அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் பெகாசஸ் உளவு மென்பொருள் சர்ச்சை தொடர்பாக விளக்கம் படித்துக்கொண்டிருந்தபோது, அவர் கையில் இருந்த அறிக்கையின் நகலை பறித்து சாந்தனு சென் கிழித்தெறிந்தார். இடைநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், வியாழக்கிழமையும் மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கினர்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையிலே இந்தக் கூட்டத்தொடரில் எந்த மசோதா மீதும் இதுவரை விவாதம் நடைபெறவில்லை. முழுமையான விவாதங்கள் இல்லாமலே, குரல் வாக்கெடுப்பு மூலம் அரசு மசோதாக்களுக்கு இரண்டு அவைகளிலும் ஒப்புதல் பெற்று வருகிறது என எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- கணபதி சுப்ரமணியம்