மம்தா பானர்ஜி, ஆனந்த மகாராஜ் எக்ஸ் தளம்
இந்தியா

மம்தாவுடன் பாஜக எம்.பி. திடீர் சந்திப்பு.. தாவும் 3 எம்.பிக்கள்?.. மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு!

Prakash J

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், கூச்பெஹாரில் உள்ள மதன் மோகன் கோயிலுக்குச் சென்று முதல்வர் மம்தா பானர்ஜி வழிபாடு செய்தார். அப்போது அந்தக் கோயிலுக்கு அருகே வசிக்கும் பாஜகவின் மாநிலங்களவை எம்பி நாகேந்திர ராய் என்ற ஆனந்த் மகாராஜ் மம்தாவை நேரில் சந்தித்துப் பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கூச்பெஹார் தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

அதற்குக் காரணம், இந்தத் தொகுதியில் முக்கியமான ராஜ்வன்ஷி சமூகத்தினரின் வாக்குகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குக் கணிசமாகக் கிடைத்திருப்பதுதான் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், ராஜ்வன்ஷி சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவரான ஆனந்த் மகாராஜ் மம்தாவைச் சந்தித்திருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்க பாஜக எம்.பி.க்கள் மூன்று பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்த உறுதியான எந்த தகவல்களும் வெளியாகவில்லை. என்றாலும், இந்தச் செய்தியால் பாஜக அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே தனிப் பெரும்பான்மை கிடைக்காமால் கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைத்திருக்கும் பாஜகவுக்கு, இப்பிரச்னை புதிய தலைவலியை உண்டாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஒடிசா| சாலையில் கொட்டிக் கிடந்த ரத்தம்.. இரு குழுக்களிடம் வெடித்த வன்முறை.. ஊரடங்கு உத்தரவு அமல்!