தெலங்கானா மாநில காவல்துறையினர் புரோக்கர்களாக மாறியுள்ளதாகவும், மாடுகளை சட்டவிரோதமாக கடத்தும் கும்பல்களுடன் கைகோத்து செயல்படுவதாகவும் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கூறினார். இதற்கு சைபராபாத் போலீஸ் கமிஷனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தெலங்கானா பாஜக எம்.எல்.ஏவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார், “இந்த நாட்களில் காவல்துறைக்கு எதிராக பேசுவது ஒரு பேஷனாக மாறியுள்ளது” என தெரிவித்தார். காவல்துறை குறித்த தனது கருத்துக்களுக்காக ராஜா சிங்கை எச்சரித்த சஜ்ஜனார், அவருக்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அரசியலமைப்பின் உயர்ந்த எம்எல்ஏ பதவியை வகிக்கும் ஒரு நபர் என்பதால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவரிடமிருந்து, குறிப்பாக காவல் துறை மீது கேட்பது வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறினார். ராஜாசிங்கின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கோரிய சஜ்ஜனார் "அவர்கள் உள்ளூர் போலீஸ் அல்லது டி.ஜி.பி.க்கள் மற்றும் கமிஷனரை கூட அணுகலாம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். நடைமுறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பது சரியானது இல்லை ”என்று அவர் கூறினார்.
ஷம்ஷாபாத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளை தனது குழுவினருடன் மீட்ட பிறகு ராஜா சிங் “சைபராபாத்தில் உள்ள கோத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இந்த கும்பல்களுக்கு போக்குவரத்துக்கு வாகனங்களை வழங்குவதை நாங்கள் கண்டறிந்தோம். போலீசார் ஏன் இந்த நபர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள், அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கிறார்கள்? சம்பளம் போதாது என்றால், நாங்கள் பிச்சை எடுத்து அவர்களுக்கு பணத்தை கொடுப்போம். ஆனால் பசு படுகொலைக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாவம் செய்ய வேண்டாம் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன், ”என்றார்.