சத்தீஸ்கர் முதலமைச்சர்  புதிய தலைமுறை
இந்தியா

முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடரும் இழுபறி - சத்தீஸ்கரில் இன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக பாஜக எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

PT WEB

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக பாஜக எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 54 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. எனினும் முதலமைச்சராக யாரை தேர்வு செய்வது என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இன்று நடைபெறும் கூட்டத்தில் கட்சி மேலிடம் நியமித்த மூன்று பார்வையாளர்களான அர்ஜூன் முண்டா, சர்பானந்தா சோனோவால், துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மூன்று முறை முதலமைச்சராக இருந்த ராமன் சிங்கிற்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாத பட்சத்தில், ஓ.பி.சி. அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக தேர்வு செய்யபடலாம் என கூறப்படுகிறது.

அதன்படி விஷ்ணுதேயோ சாய், ரேணுகா சிங், ராம்விச்சார் நேதம் ஆகியோரில் ஒருவர் முதலமைச்சராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதேசமயம் ஒ.பி.சி. பிரிவைச் சேர்ந்த அருண் சாவோ, ஓ.பி.சவுத்ரி ஆகியோரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருக்கின்றனர்.

எனவே, இன்று நடைபெறும் கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தேர்தலில் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.