குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக எம்.பி.யாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மாநிலங்களவையில் பாஜக எம்.பி.யாக இருந்த அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றனர். இதனால் மாநிலங்களவையில் பாஜகவுக்கு மூன்று இடங்கள் காலியாகவுள்ளன.
இதையடுத்து, மக்களவை எம்.பி.க்களாக இல்லாத வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் இருவரும் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற எம்.பி.யாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இருவரையும் மாநிலங்களவை எம்.பி.யாக்க பாஜக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி ஜெய்சங்கர் குஜராத்தில் இருந்தும், பாஸ்வான் பீகாரில் இருந்தும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர ஜெய்சங்கர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக்கவும் பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்காக அதிமுகவிடம் வலியுறுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.