ஒடிசா தேர்தல் களம் முகநூல்
இந்தியா

ஒடிசா | நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால கோட்டையை பாஜக தகர்த்தது எப்படி?

இரா.செந்தில் கரிகாலன்

ஒடிசாவில் 2000-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிஜூ ஜனதா தளம் - பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்ற பிஜூ தனதா தளம் ஆட்சி அமைத்தது. ஒடிசாவின் முதல்வராக முதல்முறையாக நவீன் பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2004 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது பிஜூ ஜனதாதளம். இரண்டாவது முறையாக ஒடிசாவின் முதல்வரானார் நவீன் பட்நாயக்.

வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்

தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி விரிசல் உண்டாக, 2009 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பிஜூ பட்நாயக் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்தது. தொடர்ந்து 2014, 2019 தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட பிஜூ ஜனதாதளம், நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஐந்து முறை ஒடிசாவின் முதல்வரான பெருமைக்குச் சொந்தக்காரனானார் நவீன் பட்நாயக்.

இந்தமுறை பிஜு ஜனதா தளம் வெற்றிபெற்று, நவீன் பட்நாயக் முதல்வராகி மூன்று மாதங்களைக் கடந்தால் இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள் முதல்வரான பெருமைக்குச் சொந்தக்காரர் என்கிற பெயரெடுத்திருப்பார். ஆனால், பாஜக அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.

கடந்த தேர்தல்களில் பாஜக - பிஜூ ஜனதா தளம் தனித்துப் போட்டியிருந்தாலும், நவீன் பட்நாயக்க்கு எதிராக தீவிரமான விமர்சனங்களை பாஜக முன்வைத்ததில்லை. ஆனால், இந்தமுறை மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது பாஜக. தவிர, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்தும் கருத்துக்களைத் தெரிவித்தது. தவிர, பூரி ஜகன்னாதர் கோவில் சாவி என ஒடிசா மக்களின் உணர்வுகளுக்கு நெருக்கமான விஷயங்களை பிரசாரத்தில் முன்வைத்தது பாஜக.

நவீன் பட்நாயக்

தவிர ஒடிசாவைத் தமிழர் ஆளாலமா என அமித் ஷா, தமிழரான வி.கே.பாண்டியனை முன்வைத்து மிகத் தீவிரமாக முன்னெடுத்தார். தவிர, இவ்வளவு ஆண்டுகளில் ஒடிசாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல நவீன் பட்நாயக் என்ன செய்தார் என்கிற விமர்சனங்களையும் முன்வைத்தது பாஜக.

பாஜகவின் இந்த பிரசார வியூகம் மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது என்பதே கள எதார்த்தமாக இருக்கிறது. அதேவேளை தொடர்ந்து 24 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தபோதும், தற்போதும் ஐம்பதுக்கும் அதிகமான இடங்களைப் பிஜு ஜனதாதளம் பெற்றிருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.