இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களும், போலி செய்திகளும்: தமிழக, பீகார் காவல்துறைகளின் அடுத்த அதிரடி!

புலம்பெயர் தொழிலாளர்களும், போலி செய்திகளும்: தமிழக, பீகார் காவல்துறைகளின் அடுத்த அதிரடி!

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொய்யான தகவல் பரப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இவ்வழக்கில் இடைக்கால முன்ஜாமீன் கோரி (transit Anticipatory bail), உத்தரப் பிரதேச பா.ஜ.க செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ், டெல்லி உயர் நீதிமன்றத்தை மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தமிழ்நாடு காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பீகார் காவல்துறையும் வழக்கு பதிந்துள்ளது. இதுதொடர்பாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவான விளக்கம் அளித்திருந்தது. அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்தாவது:

“தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த பீகார் மக்களுடன், உள்ளூர்வாசிகளுக்கு தகராறு ஏற்பட்டது எனக்குறிப்பிட்டு வன்முறை சம்பவங்கள் சில சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. அவை தவறான, மோசமான நோக்கத்துடன் பரப்பட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகள் என்பது தெரியவந்துள்ளது. அந்த வீடியோக்கள் பற்றிய விரிவான விசாரணைக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

01. பீகார், பாட்னாவின் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த பீகார் மக்கள் தொடர்பாக சில வன்முறை சம்பவங்கள் வீடியோவாக பரப்பப்பட்டது தெரியவந்தது. திட்டமிட்ட முறையில் தவறான, வதந்திகளை உருவாக்கி, புகைப்படங்கள்/வீடியோக்கள்/குறுஞ்செய்திகள் போன்றவற்றைத் தூண்டிவிட்டு, பொதுமக்களிடையே அச்சச் சூழலை உருவாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கப்பட்டுள்ளது. இப்படி 30 வீடியோக்கள் மற்றும் இடுகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

02. விசாரணைக்குப் பிறகு FIR இல் பின்வரும் நபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்:

1 அமன் குமார், பே-மனோஜ் ரவிதாஸ், பே-டிகி
2 ராகேஷ் திவாரி
3 ட்விட்டர் பயனர் யுவராஜ் சிங் ராஜ்புத்,
4 @SACHTAKNEWS என்ற Youtube சேனலின் இயக்குனர் மணீஷ் காஷ்யப்.

இவர்களில் குற்றம் சாட்டப்பட்ட அமன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடம் இருந்து பல ஆட்சேபனைக்குரிய பதிவுகள் மற்றும் மொபைல்களில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவை தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றன.

03. பரப்பப்பட்ட காணொளியில், ஒருவரைக் கொன்று தூக்கிலிடுவது தெரிகிறது. அதை சரிபார்த்தபோது, யாரோ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பழைய சம்பவம் என்பது தெரியவந்தது. பீகாரில் வசிக்கும் எவருக்கும் இதில் தொடர்பில்லை

04.இதேபோல் பரப்பப்பட்ட இரண்டாவது வீடியோவும் பழைய சம்பவத்துடன் தொடர்புடையது. அந்த வீடியோ ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பீகாரைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையேயான தனிப்பட்ட தகராறு பற்றியது. மேலும் அந்த சம்பவமும் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் தொடர்பு இல்லை.

05. அடுத்தடுத்த விசாரணையில், போஜ்பூர் மாவட்டத்தின் நாராயண்பூர் காவல் நிலைய வழக்கு எண்-307/22-ல் இரண்டாவது குற்றவாளியான யுவராஜ் சிங் ராஜ்புத் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அதில் தேடப்பட்டு வருகிறது. சாப்ரா மாவட்டத்திற்கு உட்பட்ட முபாரக்பூர் சம்பவத்தில் கூட, அவர் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வெளியிட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதற்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மேற்கூறிய உண்மைக்குப் புறம்பான, தவறான, வெறித்தனமான வீடியோக்கள் மற்றும் பதிவுகளின் பின்னணியில் குற்றப் போக்குடையவர்களும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

06. பேஸ்புக்கில் 9, ட்விட்டரில் 15, யூடியூப்பில் 15 மற்றும் ஜிமெயிலில் 3 தவறான பதிவுகளை இடுகையிடுவது தொடர்பாகவும் தெரியவந்துள்ளது. அனைத்தின்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் யாரும் இதுபோன்ற தவறான வழிநடத்தும், பொய்யான வீடியோக்களை நம்ப வேண்டாம் மேலும் அவற்றை பகிரவும் கூடாது. இதுபோன்ற வீடியோக்களை உருவாக்குவது அல்லது பரப்புவது மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடலாம் மற்றும் பரஸ்பர நல்லிணக்கத்தையும் வெறித்தனத்தையும் உருவாக்கலாம். அது சட்டப்படி குற்றமாகும்” என்றுள்ளார்கள்.

இந்நிலையில் இதுதொடர்பான தமிழ்நாடு காவல்துறையின் வழக்கில், இடைக்கால முன்ஜாமீன் கோரி (transit Anticipatory bail), உத்தரப் பிரதேச பா.ஜ.க செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ், டெல்லி உயர் நீதிமன்றத்தை மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், தனக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வில் நாளை விசாரணை செய்துள்ளார். இவரை கைது செய்வதற்காகத்தான் தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படை டெல்லியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்