ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் முடிவுற்று, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீரில் என்.சி. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அது முற்றிலும் மாறியுள்ளது. ஆம், காலை முதல் காங்கிரஸ் முன்னிலையில் இருந்த நிலையில் மதியத்திற்குப் பிறகு முடிவுகள் மாறின. தற்போது பாஜக அதிக இடங்களில் வென்றிருப்பதால், அக்கட்சியே மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது.
இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகட், உடனடியாக மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். பின்னர், தாயகம் திரும்பிய அவர், தான் வகித்துவந்த ரயில்வே வேலையையும் ராஜினாமா செய்தார். அதன்பிறகு, காங்கிரஸில் இணைந்த அவர், அக்கட்சி சார்பில் நடைபெற்று முடிந்த ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் களமிறக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் அவர், முன்னாள் ராணுவ கேப்டன் யோகேஷ் பைராகியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த வினேஷ் போகத், இடையில் பின்னடைவைச் சந்தித்தார். பின்னர், மீண்டும் முன்னிலை பெற்ற அவர், இறுதியில் 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் யோகேஷ் பைராகியை வீழ்த்தி வெற்றிபெற்றார்.
இதையும் படிக்க: கொல்கத்தா | தொடரும் உண்ணாவிரத போராட்டம்.. 50 மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!
வெற்றிபெற்றது குறித்து வினேஷ் போகத், “தேர்தலில் உண்மை வென்றுள்ளது. இது, போராட்டத்தின் வெற்றி. போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் வெற்றி. தங்களின் அன்பை அளித்துள்ள மக்களுக்காக நிச்சயமாக நான் பணியாற்றுவேன். அரசியல் மற்றும் மல்யுத்தம் ஆகிய இரண்டிலும் ஒரேநேரத்தில் பணிசெய்ய முடியாது” என தெரிவித்தார்.
தேர்தலில் உண்மை வென்றுள்ளது. இது, போராட்டத்தின் வெற்றி. போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிவினேஷ் போகத்
இந்நிலையில் வினேஷ் போகத் வெற்றிபெற்றது குறித்து பேசியுள்ள பிரிஜ் பூஷன் சிங், "மல்யுத்தப் போராட்டத்தில் மல்யுத்த வீரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், ஹரியானாவின் ஹீரோக்கள் அல்ல. அவர்கள் அனைத்து ஜூனியர் மல்யுத்த வீரர்களுக்கும் வில்லன்கள். வினேஷ் போகத் தேர்தலில் வென்றுள்ளாரா? ரொம்ப சந்தோஷம். அதில் எனக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஆனால்
வினேஷ் போகத் எங்கு சென்றாலும் அழிவு ஏற்படும். வேறு எதுவும் மிச்சம் இருக்காத அளவுக்கு அழிவு ஏற்படும். இப்போதுகூட பார்த்தீர்களா, காங்கிரஸ் அழிந்துவிட்டது.பிரிஜ் பூஷன் சரண் சிங்
வினேஷ் போகத் முதலில் மல்யுத்த வீரர்களிடையே பேரழிவை ஏற்படுத்தினார். இப்போது காங்கிரஸ் கட்சிக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராகத்தான் வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்தாண்டு போராட்டத்தை நடத்தினர். இந்த சர்ச்சை காரணமாக பிரிஜ் பூஷன் சிங்கிற்கு பாஜக சீட் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.