இந்தியா

பரோலில் வந்த பாலியல் குற்றவாளியிடம் ஆசிர்வாதம் பெறும் பாஜக தலைவர்கள் - தேர்தல் காரணமா?

பரோலில் வந்த பாலியல் குற்றவாளியிடம் ஆசிர்வாதம் பெறும் பாஜக தலைவர்கள் - தேர்தல் காரணமா?

Abinaya

பலாத்காரம் மற்றும் கொலை குற்ற வழக்கில் பரோலில் வெளிவந்துள்ள ராம் ரஹீம் சிங்கை, பாஜக தலைவரும் ஹிமாச்சல் போக்குவரத்து அமைச்சருமான பிக்ரம் தாக்கூர் சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை நன்நடத்தையின் பெயரில் குஜராத் அரசு விடுவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகள் தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு, மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஹரியானா மாநில அரசு 40 நாள் பரோல் வழங்கியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாஜக அமைச்சர் பிக்ரம் தாக்கூர் ராம் ரஹீம் சிங்கை சந்தித்து ஆசீர்வாதம் பெறும் வீடியோவில், ‘’ நான் அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் இருக்கிறேன், உங்கள் ஆசிர்வாதத்தை பெறவே இங்கு வந்துள்ளேன். உங்களை மிகவும் நேசிக்கும் இமாச்சல பிரதேச மக்களுக்கு உங்களது அறப்பணிகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு உங்கள் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் பிக்ரம் தாக்கூர்.

ராம் ரஹீமுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ள நேரம் குறித்து தான் எதிர்க்கட்சிகள் அதிகமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம் ஹரியானா மாநிலத்தில் ஆதம்பூர் இடைத்தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், அதனை தொடர்ந்து பஞ்சாயத்து தேர்தலும் நடக்கவிருக்கிறது. ஹரியானா மற்றும் பஞ்சாபில், ராம் ரஹீமின் பெரும் செல்வாக்கு இந்த இரண்டு தேர்தலுக்கும் உதவும் என்பது பாஜகவின் கணக்கு. அதனால் தான் ராம் ரஹீமினுக்கு இந்த திடீர் பரோல் கொடுக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

ராம் ரஹீமுக்கு அக்டோபர் 14ம் தேதி பரோல் வழங்கப்பட்டது. அதிலிருந்து ராம் ரஹீம் ஆன்லைன் மற்றும் நேரில் இறை கூட்டங்கள் நடத்தி வருகிறார். இதில் பல பாஜக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த இறை கூட்டத்தில் தான் பாஜக அமைச்சர் பிக்ரம் தாக்கூர் கலந்துகொண்டுள்ளார். இறை கூட்டங்களுக்கு பாஜக தலைவர்களின் வருகை தருவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என பாஜக தரப்பிலிருந்து கூறப்படுகின்றது.