வீடியோ கிளிப் ட்விட்டர்
இந்தியா

இஸ்லாமிய வெறுப்பு இடஒதுக்கீடு அனிமேஷன்| கர்நாடக பாஜக வெளியிட்ட வீடியோவை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

கர்நாடகாவில் பாஜக சார்பில் இஸ்லாம் இடஒதுக்கீடு குறித்த அனிமேஷன் வீடியோவை நீக்குமாறு எக்ஸ் தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Prakash J

ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் திருவிழாவில், இன்றுடன் (மே 7) சேர்த்து மூன்றுகட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அந்த வகையில், கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் ஏற்கெனவே 14 தொகுதிகளுக்கு 2வது கட்டத்தின்போது வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று (மே 7) எஞ்சியுள்ள 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக, இம்மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில், பிரதமர் மோடி கர்நாடகாவில் இஸ்லாம் மதத்தினருக்கு வழங்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீடு குறித்து கடுமையாகச் சாடியிருந்தார். தொடர்ந்து அதுகுறித்தும் அது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி குறித்தும் பல்வேறு மாநிலங்களிலும் அவர் பேசிவருகிறார்.

இந்த நிலையில், கர்நாடக இஸ்லாமிய இடஒதுக்கீடு தொடர்பாக அனிமேஷன் வீடியோ ஒன்றை, அம்மாநில பாஜக தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.

இது, இணையத்தில் வைரல் ஆன நிலையில், பாஜக வீடியோ வெளியிட்டிருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, தற்போது அந்த அனிமேஷன் வீடியோவை நீக்குமாறு எக்ஸ் தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: ”வாக்கு ஜிகாத்தா, ராம ராஜ்ஜியமா? நீங்கதான் முடிவு பண்ணணும்” - பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பரப்புரை