கொல்கத்தாவில் சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வரசந்திர வித்யாசாகர் சிலையை திரிணமுல் காங்கிரசார் உடைத்து விட்டு பழியை தங்கள் மீது போடுவதாக பாஜக தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
அமித் ஷா கொல்கத்தாவில் பரப்புரை மேற்கொள்ள வந்தபோது அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் திரிணமுல் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில் சிலர் காயமடைந்தனர். அப்போது மேற்கு வங்கத்தின் முன்னணி சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவரான ஈஸ்வரசந்திர வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. சிலையை பாஜகவினர் சேதப்படுத்தியதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா வன்முறை மூலம் வாக்குகளை பெற மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார் என குற்றஞ்சாட்டினார். நாட்டில் 6 கட்டத் தேர்தல் நடந்துள்ள நிலையில் மேற்கு வங்கத்தை தவிர வேறு எங்கும் பெரிய அளவில் வன்முறைகள் நடைபெறவில்லை என்றும் இதிலிருந்தே இதற்கு காரணம் திரிணமுல் காங்கிரஸ் என புரிந்து கொள்ளலாம் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
வன்முறையை தூண்டிவிட்ட திரிணமுல் காங்கிரஸ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் அமித்ஷா வினவினார். கொல்கத்தாவில் சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வரசந்திர வித்யாசாகர் சிலையை திரிணமுல் காங்கிரசார் உடைத்து விட்டு பழியை தங்கள் மீது போடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.