காலை 11 மணிக்கு நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்பு எந்த கட்சியும் தொடர்ச்சியாக மூன்று முறை ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதால், பாரதிய ஜனதா கட்சி நயப் சிங் சைனி பதவியேற்பு விழாவை பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தேசிய ஜனநாயக முன்னணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர்.
நயாப் சிங் சைனி கடந்த மார்ச் மாதத்தில் முதலமைச்சராக பதவியேற்றபோது, ஹரியானா மாநிலத்தில் பாஜக பலவீனமாக உள்ளதாகவும் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்துவிடும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. கருத்துக்கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதையெல்லாம் பொய்யாக்கி பாஜக வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய பதவியேற்பு நிகழ்வில் கூட்டணித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டது முக்கியமானதாக கருதப்படுகிறது.
நயப் சிங் சைனி பதவியேற்ற பிறகு, தேசிய ஜனநாயக முன்னணி முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.