இந்தியா

ரூ.750 கோடியுடன் முதலிடம்: காங்கிரசை 5 மடங்கு அதிகம் தேர்தல் நன்கொடை பெற்ற பாஜக!

நிவேதா ஜெகராஜா

2019-20 ஆம் ஆண்டில் தான் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது பாஜக. இடைப்பட்ட இந்த காலக்கட்டத்தில் ரூ.750 கோடி நன்கொடை பெற்றுள்ள அக்கட்சி, நன்கொடை பெறுவதில் தொடர்ந்து முதலிடத்தில் வகிக்கிறது.

கடந்த 2019-20 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன. இதன் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் தனிநபர் நன்கொடைகளைப் பெறுவதில் ஏழாவது ஆண்டாக, பாஜக முதலிடத்தை பிடித்துள்ளது என்கிறது தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ள தரவு.

பாஜக தேர்தல் ஆணையத்திற்கு (இசி) சமர்ப்பித்த அறிக்கையில், 2019-20 ஆம் ஆண்டில் மட்டும், கம்பெனி மற்றும் தனிநபர்களிடமிருந்து சுமார் 750 கோடி ரூபாய் நன்கொடைகள் பெறப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததை விட குறைந்தது ஐந்து மடங்கு அதிகம். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.139 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.59 கோடி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.8 கோடி, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.19.6 கோடி, சிபிஐ கட்சிக்கு ரூ.1.9 கோடி நன்கொடைகள் கிடைத்ததுள்ளது.

இதில், பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகரின் ஜூபிடர் கேபிடல், மேக்ரோடெக் டெவலப்பர்ஸ், பி ஜி ஷிர்கே கட்டுமான தொழில்நுட்பம், ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை, ஜன்கல்யன் தேர்தல் அறக்கட்டளை ஆகியவை பாஜகவுக்கு மிகப்பெரிய நன்கொடையாளராக நிதி பங்களிப்பு செய்துள்ளனர்.

ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை - 217.75 கோடி ரூபாய், ஜன்கல்யன் தேர்தல் அறக்கட்டளை - ரூ.45.95 கோடி ஜூபிடர் கேபிடல் - ரூ.15 கோடி, ஐடிசி - ரூ.76 கோடி, லோதா டெவலப்பர்ஸ் - ரூ.21 கோடி, என நிதி வழங்கியுள்ளன. தேர்தல் அறக்கட்டளை என்பது, பெருநிறுவன நிறுவனங்களிலிருந்து தன்னார்வ பங்களிப்புகளை பெற்று அரசியல் கட்சிகளுக்கு விநியோகிக்கும் அமைப்பு. 

பாஜகவுக்கு அதிக நிதியளித்த ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை அமைப்பு பாரதி எண்டர்பிரைசஸ், ஜிஎம்ஆர் ஏர்போட்ஸ் டெவலப்பர்ஸ் மற்றும் டிஎல்எஃப் லிமிடெட் ஆகிய பெரு நிறுவனங்களை முக்கிய நன்கொடையாளர்களாகக் கொண்டுள்ளது. ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தின் நிறுவனங்களிடமிருந்து ஜன்கல்யன் தேர்தல் அறக்கட்டளை நிதி பெற்று பாஜகவுக்கு கொடுத்துள்ளது.

இவர்களை தவிர பிரபல பில்டர் சுதாகர் ஷெட்டிக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனமான குல்மார்க் ரியல் எஸ்டேட் நிறுவனம் பாஜகவுக்கு ரூ.20 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளது. இதே சுதாகர் ஷெட்டியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்க இயக்குநரகம் 2020 ஜனவரியில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், குறைந்தது 14 கல்வி நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளன. டெல்லி மேவார் பல்கலைக்கழகம் (ரூ.2 கோடி), கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் (ரூ.10 லட்சம்), ஜி.டி. கோயங்கா இன்டர்நேஷனல் பள்ளி, சூரத் (ரூ.2.5 லட்சம்), பதானியா பப்ளிக் பள்ளி, ரோஹ்தக் (ரூ.2.5 லட்சம்), லிட்டில் ஹார்ட்ஸ் கான்வென்ட் பள்ளி, பிவானி (ரூ.21,000), மற்றும் ஆலன் கேரியர், கோட்டா (ரூ.25 லட்சம்) எனக் கொடுத்துள்ளன.

மேலும், கட்சியின் நன்கொடையாளர்களில் பல பாஜக உறுப்பினர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் ரூ.5 லட்சம், மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் ரூ.2 கோடி, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.1.1 கோடி, கிர்ரான் கெர் ரூ.6.8 லட்சம் மணிப்பால் குளோபல் எஜுகேஷன் தலைவர் டி வி மோகன்தாஸ் பை ரூ.15 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர்.

இப்படி தனிநபர்கள், நிறுவனங்கள், தேர்தல் அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்கள் அளித்த ரூ.20,000-க்கு மேல் நன்கொடைகளை தனது அறிக்கையில் பாஜக குறிப்பிட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.750 கோடிக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.