தேர்தல் நிபுணத்துவத்தில் அமித் ஷா கல்லூரியின் முதல்வர் என்றால் பிரஷாந்த் கிஷோர் ஒரு மாணவர் என பாரதிய ஜனதாவின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் பிரச்சார வியூகத்தை வடிவமைத்த அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை, மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்கான ஆலோசகராக மம்தா பானர்ஜி நியமனம் செய்துள்ளார். தேர்தல் வெற்றி வியூகங்களை வகுத்து தருவதில் நிபுணராக கருதப்படும் பிரஷாந்த் கிஷோர் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு உதவ உள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, பிரஷாந்த் கிஷோர் ஒன்றும் அமித் ஷாவை விட பெரிய தேர்தல் நிபுணர் அல்ல என்று கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் நிபுணத்துவத்தில் அமித் ஷா ஒரு கல்லூரி முதல்வர் நிலைக்கு உயர்ந்து விட்டதாகவும் ஆனால் பிரஷாந்த் கிஷோர் இன்னும் மாணவராகவே இருப்பதாகவும் விஜய்வர்கியா தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா மீது அம்மாநில மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றும் எவ்வளவு பெரிய தேர்தல் நிபுணர்கள் வந்தாலும் அவரை காப்பாற்ற முடியாது என்றும் விஜய்வர்கியா கருத்து தெரிவித்துள்ளார்.