குஜராத் மாநிலத்தின் மாநிலங்களவை இடைத் தேர்தலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த மே மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இந்தப் புதிய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளரான ஜெய்சங்கர் பதவியேற்றார். இதனையடுத்து ஜெய்சங்கர் பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இன்று பாஜகவில் இணைந்தார். இவர் தேர்தலில் போட்டியிடாததால், ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவைக்கு உறுப்பினராக வேண்டும்.
இந்நிலையில் பாஜக சார்பில் குஜராத் மாநிலத்தின் மாநிலங்களவை இடைத்தேர்தலில் ஜெயசங்கர் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பு பாஜக இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி குஜராத் மாநிலத்தில் இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான இடைத்தேர்தலில் பாஜக சார்பில் ஜெய்சங்கர் மற்றும் ஜூகால்ஜி மாத்தூர்ஜி தாகோர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
1977ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியான ஜெய்சங்கர் இந்தியா- அமெரிக்கா மற்றும் இந்தியா-சீனா உறுவுகளில் பெரும் பங்காற்றினார். அத்துடன் இந்தியா- அமெரிக்கா 2008 அணு ஆயுத ஓப்பந்தத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் வெளியுறவுத் துறை செயலாளராக பணிப்புரிந்தது குறிப்பிடத்தக்கது.