ரேகா பத்ரா ட்விட்டர்
இந்தியா

சந்தேஷ்காலி பாஜக வேட்பாளர்: விமர்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்.. புகார் அளித்த ரேகா பத்ரா!

பாசிர்ஹட் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ரேகா பத்ராவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் அவர்மீது பல்வேறு விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.

Prakash J

நாடு முழுவதும் ஜனநாயகப் பெருவிழாவுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாய்ச் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பாசிர்ஹட் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் சந்தேஷ்காலி கிராம மக்களுக்காகக் குரல்கொடுத்த ரேகா பத்ரா களமிறக்கப்பட்டுள்ளார்.

அவர் களமிறக்கப்பட்டதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் அவர்மீது பல்வேறு விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாநில அரசின் காப்பீடு திட்டப் பயனாளியாகவும் பெண்கள் நலன் சாா்ந்த மாநில அரசின் பல திட்டங்களிலும் ரேகா பத்ரா பலனைடந்து வருவதாக, திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், அதுதொடா்பான ஆவணங்களையும் பொதுவெளியில் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலளித்த ரேகா பத்ரா, ’மேற்கு வங்கத்தின் குடிமகளாக மாநில அரசின் நலத்திட்டங்களில் பலனடைவதற்கு உரிமை இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உபியின் காட்ஃபாதர்: பிரபல கேங்ஸ்டர் முக்தர் அன்சாரி சிறையில் திடீர் மரணம்.. பதற்றத்தில் மாநிலம்!

இந்நிலையில் ரேகா பத்ரா, “சமூக ஊடகங்களில் கைப்பேசி எண், அரசுத் திட்டங்களின் விவரங்கள் உள்பட எனது தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்களை பொதுவெளியில் தாம்லுக் மக்களவைத் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளா் பட்டாச்சாா்யா வெளியிட்டுள்ளார். ஆகையால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேசிய மகளிா் ஆணையத்தில் தன்னுடைய வழக்குரைஞா் மூலம் புகாரளித்துள்ளாா்.

மேலும் அந்தப் புகாரில் தனது தனியுரிமை மீறப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட்டு தனது கண்ணியத்தை அவமதித்திருப்பதாகவும் ரேகா பத்ரா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதையும் படிக்க: கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ - வாட்ஸ் அப் எண்ணுடன் பரப்புரையை ஆரம்பித்தார் சுனிதா! அடுத்த ராப்ரிதேவி?