மம்தா பானர்ஜி, அமித் மால்வியா எக்ஸ் தளம்
இந்தியா

”கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள்; கேள்விக்குப் பதிலளியுங்கள்” - மம்தா பானர்ஜிக்கு பாஜக பதில்!

Prakash J

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் சமீபத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நாள்தோறும் பலவித தகவல்கள் வந்தபடியே உள்ளன. என்றாலும், இதுகுறித்து சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்திவருகிறது.

கொல்கத்தா மருத்துவமனை

இந்த நிலையில், பெண்களை இதுபோன்ற குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், மீண்டும் இத்தகைய குற்றங்கள் நடைபெறாத வண்ணம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கவும் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என மம்தா பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதையும் படிக்க; கடத்தியவரிடமிருந்து பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தை! ராஜஸ்தானில் ருசிகரம்.. நடந்தது என்ன? #Video

மேலும் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். ”இதுபோன்ற முக்கியமான பிரச்னைக்கு உங்களிடமிருந்து பதில் வரவில்லை. இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரிடமிருந்து ஆகஸ்ட் 25-ஆம் தேதி பதில் கிடைத்தது. ஆனால், எனது கடிதத்தில் எழுப்பப்பட்ட பிரச்னையின் தீவிரத்தன்மை அதில் கவனிக்கப்படவில்லை” எனக் கூறி 2-வது முறையாக மீண்டும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், ’’கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள். கேள்விக்கு பதில் அளியுங்கள்’’ என மேற்கு வங்காள மாநில பாஜக துணைத் தலைவர் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமித் மால்வியா, “பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கடுமையான விதிகளை அமல்படுத்த மேற்கு வங்காள அரசு ஏதும் செய்யாதது குறித்து மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும். கடிதம் எழுதுவரை நிறுத்துங்கள். கேள்விக்கு பதில் அளியுங்கள். நீங்கள்தான் பொறுப்பு" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: விவசாய போராட்டம்: சர்ச்சை கருத்து|கங்கனா ரனாவத்தை கடுமையாக விமர்சித்த ராபர்ட் வதோரா!