சபாநாயகர் பதவியைக் கோரும் கூட்டணி கட்சிகள் pt web
இந்தியா

சபாநாயகர் பதவி கோரும் கூட்டணி கட்சிகள்... நெருக்கடியில் பாஜக! விட்டுகொடுக்குமா? விட்டுப்பிடிக்குமா?

PT WEB

சபாநாயகர் பதவியை வானாளாவிய அதிகாரம் படைத்த அரசியல் சாசனப் பதவி எனக் குறிப்பிடுவார்கள். இந்தியாவின் ஆட்சி பீடமாக திகழும் நாடாளுமன்றத்தின் முக்கிய அங்கமான மக்களவையை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் சபாநாயகர்.

மக்களவை இருக்கைகள்

இவரது கைவிரல் அசைவில்தான் அவையின் ஒவ்வொரு நகர்வும் அரங்கேறும். குறிப்பாக அவையில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத போது சபாநாயகரின் முடிவுகள் மிகமிக முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும். எனவேதான் அப்பதவி தற்போதை சூழலில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடையே பேசிய மூத்த பத்திரிகையாளர் சபீர், “மசோதாக்கள் நிறைவேற்றுவதை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவே அப்பதவியை கூட்டணி கட்சிகள் கோரியிருக்கலாம். யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் குதிரைபேரங்களில் இருந்து தங்கள் கட்சியை தற்காத்துக்கொள்ள மிகவும் உதவும் என்று கருதியும் சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகள் கோரியிருக்கலாம்” என்றார்.

பத்திரிகையாளர் சபீர்

இந்நிலையில், நாட்டை வழிநடத்தும் ஆட்சி பீடத்தின் தலைமைப்பதவியை கூட்டணி கட்சிகளுக்கு பாஜக அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்துவிடுமா என்ற கேள்வியும் உள்ளது.

கடந்த கால அரசியல்...

தனிப்பெரும்பான்மை பெறாத கட்சிகள் ஆளும் போது சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுத்தந்த முன்னுதாரணங்களும் கடந்த கால அரசியலில் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, 1998, 1999இல் அமைந்த வாஜ்பாய் அரசில் தெலுங்குதேசம் கட்சியின் பாலயோகி சபாநாயகராக இருந்தார். 2004இல் மன்மோகன் சிங் அரசில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகராக இருந்தார். இந்நிலையில், இம்முறை பாஜக என்ன முடிவு எடுக்கும் என்பதற்கான விடை சில நாட்களில் தெரிந்துவிடும்.