“அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பாஜக தொண்டர்கள் நேரடியாக பொதுமக்களை தொடர்பு கொண்டு கட்சியின் கொள்கைகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும்” என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பாஜக தொண்டர்கள் உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும், குறிப்பாக எல்லைப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் சென்று சேரும் வகையில் பாஜக அரசின் திட்டங்கள் குறித்து கட்சி தொண்டர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும்” குறிப்பிட்டு பேசியுள்ளார்.
மேலும் பேசுகையில், “வாக்கு சேகரிப்பு என்கிற நோக்கம் அல்லாமல், தேச நலன் மற்றும் சமூக நலன் ஆகியவற்றிற்காக பாஜக செய்து வரும் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்” என மோடி கேட்டுக் கொண்டதாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார். இதேபோல, `பொது மக்களையும், பல்வேறு சமுதாயங்களையும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்க வேண்டும். அரசின் கொள்கைகளை விளக்கினால் மக்கள் புரிந்து கொள்வார்கள்’ என்று கூட்டத்தில் மோடி பாஜக தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரதமர் பாஜக தொண்டர்களிடம் பேசியது நேரலை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மூலம் தமிழ் மொழி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது போலவே பிற மொழிகள் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பிரதமர் பேசியதாக தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாஜக தேசிய தலைவர் ஜெய் பிரகாஷ் நட்டா கட்சியின் தேசிய தலைவராக அடுத்த வருடம் (2024) ஜூன் மாதம் வரை தொடர்வார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இந்த வருடம் நடைபெற உள்ள ஒன்பது மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் அடுத்த வருடம் மே மாதத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் பாஜக, ஜெய் பிரகாஷ் நட்டா தலைமையிலே செயல்படும் என கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதேபோல பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருட மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்பதும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என அமித் ஷா பேசினார். ஒவ்வொரு தொகுதியிலும் பூத் என அழைக்கப்படும் வாக்குச்சாவடி மட்டத்தில் தொண்டர்கள் விரிவாக பணியாற்ற வேண்டும் என பாஜக மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இந்த வருடம் நடைபெற உள்ள ஒன்பது சட்டமன்ற தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று அடுத்த வருட மக்களவைத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என நட்டா வலியுறுத்தினார்.
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜக சிறப்பான வெற்றியை பெற வேண்டும் என பாஜக தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். முன்னாள் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை தனியாக சந்தித்து 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இதே போல பல்வேறு மாநிலங்கள் தொடர்பாக வரும் நாட்களில் ஆலோசனைகள் நடைபெறும் என பாஜக தலைவர்கள் கருதுகின்றனர்.
- கணபதி சுப்ரமணியம்.