இந்தியா

பிரியங்கா சோப்ரா ஹேர் ஸ்டைலில் மம்தா பானர்ஜி புகைப்படம் ! மார்பிங் படத்தை பதிவேற்றிய பெண் கைது

Rasus

மார்பிங் செய்யப்பட்ட மம்தா பானர்ஜி புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்ததாக பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

உலக அளவில் உள்ள திரைப்பட நடிகர்களையும், ஆடை வடிவமைப்பாளர்களையும் ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சியாக மெட்காலா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 1948 முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆடை வடிவமைப்பு தொடர்பான நிறுவனங்களின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி திரட்டும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் உலக அளவில் பிரபலமான நடிகர், நடிகைகள் வித்தியாசமான ஆடைகளுடன் பங்கேற்று கவனம் பெறுகின்றனர்.

இந்தாண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா நிகழ்வில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். இதில் கலந்துக்கொண்ட பிரியங்கா சோப்ராவின் கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகின. வித்தியாசமான ஹேர் ஸ்டைல், அதன் மீது ஒரு கிரீடம், மிணுமிணுக்கும் ஆடை, கண்கள் ஓரம் பளபளக்கும் வெண்ணிற மேக்கப் என முழுவதுமாக மாறி வந்த  பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தை பலரும் கலாய்த்தும், மீம்ஸ் போட்டும் வருகின்றனர். ‘இது என்னப்பா ஹேர்ஸ்டைல்’, ‘பிரியங்கா சேப்ரா’ எங்க பலரும் வாய்க்கு வந்தபடி கலாய்க்கின்றனர்.

இந்நிலையில் கலாய்ப்புக்கு உள்ளான பிரியங்கா சோப்ராவின் அந்த புகைப்படத்தில் அவரின் முகத்தை எடுத்துவிட்டு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பொருத்தப்பட்டு மார்பிங் செய்யப்பட்டுள்ளது. இந்த மார்பிங் செய்யப்பட்ட மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்ததாக கூறி மேற்குவங்க மாநிலம் ஹவ்ரா மாவட்ட பெண் பாஜக நிர்வாகியான பிரியங்கா ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தாஸ்நகர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரையடுத்து பிரியங்கா ஷர்மா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதற்கு சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. மம்தா பானர்ஜி விமர்சனங்களை ஏற்க தயங்குகிறாரா என்ற கருத்தும் நிலவுகிறது. பொதுவாக பிரதமர் மோடி மீது மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார். பிரதமர் மோடி மிக மோசமான அரசியல்வாதி எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மோடியின் ஆட்சியை அகற்றுவது ஆங்கிலேயர் ஆட்சியை வெளியேற்ற அமைத்த ‘வெள்ளையனே வெளியேறு’ புரட்சியை போன்றது என பல்வேறு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா படத்தை மார்பிங் செய்து மம்தா பானர்ஜி படத்தை வைத்தால் கைதுதான் நடவடிக்கையா..? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். பிரதமர் மோடியை வைத்தும் சிலர் மார்பிங் செய்கிறார்களே என பலர் கூறுகின்றனர். அப்படியென்றால் தன் மீது வைக்கப்படும் விமர்சனத்தை அடக்குமுறையோடு தான் மம்தா பானர்ஜி கையாள்வாரா
என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.