கேரளாவில் பாலியல் புகார் வழக்கில் சிக்கிய முன்னாள் பேராயரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் கன்னியாஸ்திரி அளித்த புகாரின்பேரில், கடந்த 3 நாட்களாக முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரணை நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். போதுமான ஆதாரங்கள் மற்றும் விசாரணைக்குப் பிறகே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கோட்டயம் காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி சங்கர் கூறினார். அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதான சில மணி நேரங்களில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஃப்ராங்கோ கூறியதை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு, அவர் சிறையிலடைக்கப் படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அவர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் போலீஸ் காவலில் செல்ல அவருக்கு விருப்பமில்லை என்றும் அதற்கு அனுமதியளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாலியல் வழக்கில் பேராயர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.