இந்தியா

முடிவுக்கு வந்தது குழப்பம்... மணிப்பூர் முதல்வராக பிரென் சிங் தேர்வு

முடிவுக்கு வந்தது குழப்பம்... மணிப்பூர் முதல்வராக பிரென் சிங் தேர்வு

ஜா. ஜாக்சன் சிங்

மணிப்பூர் மாநில முதல்வராக பிரென் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக அங்கு நடைபெற்று வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. இதையடுத்து, அக்கட்சி அங்கு விரைவில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மணிப்பூர் முதல்வர் பதவிக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற பிரென் சிங், பிஸ்வைத் சிங், யும்னாம் கேம்சந்த் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் பிரென் சிங் அம்மாநிலத்தில் கடந்த முறை முதல்வராக பதவி வகித்தவர் ஆவார்.

இந்த மூன்று தலைவர்களும் முதல்வர் பதவிக்காக கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டிருந்தனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை மூவரும் தனித்தனியாக சந்தித்து பேசினர்.

இதனிடையே, யும்னாம் கேம்சந்த் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்றவர் என்பதால் அவருக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும் என நேற்று முதல் தகவல் வெளியாகிக் கொண்டிருந்தன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக அம்மாநில பாஜக பொறுப்பாளர்களான நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு ஆகியோர் நேற்று மணிப்பூர் சென்றனர். சுமார் 3 மணிநேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, மணிப்பூர் முதல்வராக மீண்டும் பிரென் சிங்கையே தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.