இந்தியா

நடுத்தர குடும்பத்தில் பிறந்து திரிபுரா முதல்வராகிறார் பிப்லப் குமார் தேப்

நடுத்தர குடும்பத்தில் பிறந்து திரிபுரா முதல்வராகிறார் பிப்லப் குமார் தேப்

Rasus

திரிபுரா மாநில முதலமைச்சராக பிப்லப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவந்த இடதுசாரி ஆட்சியை அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அகற்றியது. மொத்தமுள்ள 59 தொகுதிகளில் பாஜக 35 தொகுதிகளில் வெற்றிகண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. இதனையடுத்து மாநிலத்தில் யார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் திரிபுரா மாநில பாஜக முதலமைச்சராக பிப்லவ் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜிஷ்ணு தேப் பர்மன் துணை முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி அகர்தலாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சராக பிப்லப் குமார் தேப் பதவியேற்கும் விழா அகர்தலாவில் உள்ள விவேகானந்தா மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பல மத்திய அமைச்சர்கள், மற்றும் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1971-ம் ஆண்டு ராஜ்தார் கிராமமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிப்லப் குமார் தேப், 1999-ம் ஆண்டு தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் பிப்லப் குமார் மாநில பாஜக தலைவராக உள்ளார். இவரது மனைவி  பாரத ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.