குஜராத்தில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள் 11 பேர் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா வன்முறைச் சம்பவத்தின்போது, ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு, அவரது 3 வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேரை நன்னடத்தை அடிப்படையில், சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு சிறையில் இருந்து விடுவித்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுதலை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குஜராத் மாநில சட்ட விதிகளின்படி, குற்றவாளிகள் விடுதலை பெற தகுதி உடையவர்களா இல்லையா என்பதுதான் கேள்வி என்றனர். இது தொடர்பாக, குஜராத் அரசு மற்றும் மத்திய அரசு இரு வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.