இந்தியா

யூடியூப் வீடியோக்கள் மூலம் 50 லட்சம் ரூபாயில் Audi கார் வாங்கிய இளைஞர்!

யூடியூப் வீடியோக்கள் மூலம் 50 லட்சம் ரூபாயில் Audi கார் வாங்கிய இளைஞர்!

PT

பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், யூடியூப் சேனல் மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடி காரை வாங்கியிருக்கிறார்.

இன்று யூடியூப் சேனல் மூலம் பலரும் வருமானத்தைப் பெற்று வருகின்றனர். தங்களுக்குத் தெரிந்த திறமைகள், தொழில்கள் ஆகியவற்றின் மூலம் யூடியூப் சேனல்களில் வீடியோக்களைப் பதிவிட்டு, லைக்ஸ்களை அள்ளுவதுடன், பார்வையாளர்களையும் பெருக்கி வருமானம் பார்த்து வருகின்றனர். யூடியூப் மூலம் பீகாரைச் சேர்ந்த ஓர் இளைஞர் ஆடி கார் ஒன்றை வாங்கி அசத்தியிருக்கிறார். அவருடைய படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகாரைச் சேர்ந்தவர் ஹர்ஷ் ராஜ்புட். பட்டப்படிப்பு முடித்த இவர், திரையில் சாதிக்க வேண்டும் என்ற கனவில் மிதந்ததுடன், அதற்கான முயற்சியிலும் தீவிரம் காட்டினார். ஆனால் இடையில் கொரோனா லாக் டவுனால் அவரது கனவு சிதைந்துபோனது. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாத அவர், அந்த சமயங்களில் தன் பெயரில் யூடியூப் சேனலை ஆரம்பித்து, அதில் சினிமா மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றிய நகைச்சுவையான வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டார். அவரது சேனல், கொஞ்ச நாட்களிலேயே வைரல் ஆக ஆரம்பித்தது. அதன் விளைவு, அவருடைய சேனலை இன்று பல லட்சம் பார்த்து வருகின்றனர்.

அதிலும், 33 லட்சம் பேர் அவருடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்து உறுப்பினர்களாக உள்ளனர். குறிப்பாக, அவரது வீடியோ ஒன்றை இதுவரை 2 கோடி பேர் பார்த்துள்ளனர். இதன்மூலம், மாதந்தோறும் அவருக்கு 5-8 லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும், அந்த வருவாய் மூலம் தற்போது 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஆடி (Audi A4) சொகுசு கார் ஒன்றை வாங்கியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. மேலும் அவர், பிராண்ட் புரோமோஷன்கள் மூலம் தனியே வருவாய் ஈட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த ஜூன் 2022 முதல் அக்டோபர் 2022 வரை அவருக்கு கூகுள் விளம்பரப் பிரிவிலிருந்து கிடைத்த தொகை சராசரியாக ஒரு மாதத்துக்கு ரூ.4.5 லட்சம் எனவும் கூறப்படுகிறது.

- ஜெ.பிரகாஷ்