இந்தியா

காட்டாறு வெள்ளத்தை பொருட்படுத்தாமல் “டிக் டாக்”கிற்காக ஆபத்தை தேடும் இளைஞர்கள்

காட்டாறு வெள்ளத்தை பொருட்படுத்தாமல் “டிக் டாக்”கிற்காக ஆபத்தை தேடும் இளைஞர்கள்

webteam

‘டிக் டாக்’ செயலில் வீடியோவை பதிவேற்றம் செய்வதற்காக ஆற்றில் இளைஞர்கள் குதிக்கும் சம்பவம் பீகாரில் நடந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் மோகம் நாளுக்கு நாள் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்கள் எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதை மறந்த இளைஞர்கள், அதில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக உயிருக்கு ஆபத்து விளைக்கும் பல செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவ்வப்போது சிலர் உயிரையே இழந்துவிடுகின்றனர். 

குறிப்பாக ஆபத்தான இடங்களில் இருந்து செல்ஃபி எடுப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமின்றி ‘டிக் டாக்’ செயலியில் பதிவேற்றம் செய்வதற்காக ஆபத்தான முறையில் சிலர் வீடியோவை எடுக்கின்றனர். அண்மையில் கூட ‘டிக் டாக்’ வீடியோவிற்காக சாகசம் செய்த ஒரு இளைஞர் கழுத்து எலும்பு உடைந்து இறந்துபோனார். 

இதேபோன்று ‘டிக் டாக்’ வீடியோவிற்காக ஆபத்தை அறியாமல் பீகார் இளைஞர்கள் பாலத்தின் மேல் இருந்து ஆற்றில் குதித்து வருகின்றனர். பீகாரில் ஓடும் தர்பாங்கா ஆற்றின் குறுக்கே ரயில்வே பாலம் ஒன்று உள்ளது. இதில் ஏறி நிற்கும் இளைஞர்கள், பாலத்தின் விளிம்பில் இருந்து செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்கின்றனர். அத்துடன் பாலத்திலிருந்து குதித்தும், பாய்ந்தும் வீடியோக்களை எடுக்கின்றனர். இந்த வீடியோக்களை ‘டிக் டாக்’, ‘யூடியூப்’ போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். இந்த பாலத்தில் எப்போதும் வெள்ளம் வராது, ஆனால் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஆறு கரைபுரண்டோடுகிறது என்பதால், தாங்கள் வீடியோ மற்றும் செல்ஃபிக்கள் எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.