திருநங்கைகள் புதியதலைமுறை
இந்தியா

பீகார் | காவலர் தேர்வில் வெற்றி பெற்று சப் இன்ஸ்பெக்டரான திருநங்கை... முன்னோடியாக திகழும் தமிழ்நாடு!

Jayashree A

சமீப ஆண்டுளாக மாற்றுப் பாலினத்தவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் கௌரவத்தை அரசாங்கமும் சில தனியார் அமைப்புகளும் வழங்கி வருகிறது. குறிப்பாக மாற்றுப் பாலினத்தவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் பொருட்டு, தேர்வுகளில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதனால் சமூக அழுத்தத்திலிருந்து வெளிவரும் அவர்கள் தங்களின் திறமையால் தொழிலிலும் வெற்றி பெற்று பல உயர்ந்த பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.

அப்படி பீகார் மாநிலம் பாகல்பூரில் வசிக்கும் மான்வி மது கைஷ்யப் என்ற திருநங்கை சப் இன்ஸ்பெக்டருக்கான தேர்வு எழுதி, அதில் வெற்றிப்பெற்று முறையாக பீகார் மாநிலத்தின் சப் இன்ஸ்பெட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்தான் பீகாரின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்.

மான்வி மது கைஷ்யப்

சிறுவயதில் மான்வி மதுகாஷ்யப்தான் ஒரு திருநங்கை என்று தெரிந்துக்கொண்டதும் சமூகத்தால் பல வேதனைகளுக்கு ஆளாகியிருக்கிறார். பல சிரமங்களுக்கு ஆளாகி வந்துள்ளார். இருப்பினும் தற்போது அவர் பெற்றுள்ள வெற்றிக்கு முன், அவர் பட்ட சிரமங்களும் வேதனைகளும் தவிடுபொடியாகிவிட்டது என்கிறார். இந்நிலைக்கு அவர் வருவதற்கு அவரது பெற்றோர்கள் முக்கிய காரணம் என்றும் கூறுகிறார்.

இவருடன் சேர்த்து மேலும் இரு திருநங்கைகளும், ஒரு திருநம்பியும் சப் இன்ஸ்பெக்டர்களாக பீகாரில் பணிபெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவருக்கு முன்னோடியாக இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த ப்ரிதிகா யாஷினி என்ற திருநங்கை. இவர் தற்போது தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

ப்ரிதிகா யாஷினி

இவர் இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளார் என்ற பெருமையை பெற்றவர். சமீபத்தில்கூட, உலகின் உயரமான சிகரமான மவுண்ட் எவரெஸ்ட்டை எட்டிய காவல்துறையைச் சேர்ந்த முதல் திருநங்கை என்ற பெருமையை ப்ரித்தியா யாஷினி படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.