Aguwani Sultanganj Ganga bridge Twitter
இந்தியா

பீகார்: ரூ.1,717 கோடி செலவில் கங்கை மீது கட்டப்பட்டு வந்த பாலம் மீண்டும் இடிந்து விழுந்தது! வீடியோ

Rishan Vengai

பீகார் மாநிலம் பாகல்பூரில் ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் பகுதிகளுக்கு இடையே கங்கை நதியின் நடுப்பகுதியில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பாலத்தின் கட்டுமானப்பணி நடைபெற்றுவரும் நிலையில், ஞாயிற்று கிழமையான இன்று மாலை 6 மணியளவில் பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

பாலம் இடிந்துவிழுந்த காட்சிகள் அருகில் இருந்த உள்ளூர்வாசிகளால் படம் பிடிக்கப்பட்டது. உயிர்சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

1,717 கோடி செலவில் 3.1 கிமீ வரை கட்டப்படும் அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம்!

கங்கை நதியின் இருபுறம் உள்ள NH-31 மற்றும் NH-107 இரண்டு தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட இந்த பாலமானது, ரூபாய் 1,710 கோடி மதிப்பீட்டளவில் பீகார் அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த பாலம் முடிக்கப்பட்டால் விக்ரமசிலா சேது மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து சிக்கல் தடுத்துநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் பாஹல்பூர் மாவட்டத்துடன் ககாரியா, சஹர்சா, மாதேபுரா மற்றும் சுபால் முதலிய 4 மாவட்டங்கள் இணைக்கப்படும் வகையில், டால்ஃபின் வடிவமைப்பில் டோல் பிளாசா முதலிய வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் மேற்பாலம் கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ் குமாரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் தொடக்கத்திலிருந்து 3 வருடங்கள் இடைவெளிக்குள் கட்டிமுடிப்பதாக தொடங்கப்பட்ட இந்த கட்டுமான பணியானது, இடையில் பருவநிலை மாற்றம், வெள்ளப்பெருக்கு, புயல் முதலிய இயற்கை பேரிடர்களால் தாமதமானதாக கூறப்பட்டது.

2022ஆம் ஆண்டு முதலில் விழுந்த மேம்பாலம்!

முதன்முதலில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி கட்டுமானத்தின் போதே அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் இடிந்து விழுந்தது. 100 அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த மேற்கட்டுமானம் சுல்தங்கஞ்ச் முனையிலிருந்து ஒரு பகுதி இடிந்துவிழுந்த நிலையில், அப்போதும் பலத்த காற்றின் காரணமாக தான் இடிந்து விழுந்ததாக சொல்லப்பட்டது. அது மத்திய அமைச்சர் நிதின் கட்கரியால் “மோசமான கட்டுமானத்தால் தான் இடிந்துவிழுந்ததாக” குற்றஞ்சாட்டப்பட்டது.

Aguwani Sultanganj Ganga bridge

அதே போல கடந்த 2022 டிசம்பரிலும் பீகாரின் பெகுசராய் பகுதியில் புர்ஹி கந்தக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும், அதனால் தான் பாலத்தின் 3 தூண்கள் விழுந்ததாகவும் கூறப்பட்டது.

Aguwani Sultanganj Ganga bridge

அதற்கு முன்பு நவம்பரிலும், முதல்வர் நிதிஷ் குமாரின் நாளந்தா மாவட்டத்தில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளி இறந்தநிலையில், ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமன்றி கிஷன்கஞ்ச் மற்றும் சஹர்சா மாவட்டங்களில் கட்டப்பட்டு வந்த பாலங்களும் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

2ஆவது முறையாக இடிந்து விழுந்த பாஹல்பூர் பாலம்! பாஜக தலைவர் அமித் மாளவியா விமர்சனம்!

2ஆவது முறையாக பாஹல்பூர் பாலம் இடிந்துள்ள நிலையில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் விசாரணைக்கு உத்தவிரட்டுள்ளார். இந்நிலையில், ஊழல் நிறைந்த ஆட்சி நடத்தும் நிதிஷ்குமார் முதல்வர் பதவியில் இருந்தும், துணை முதல்வர் பதவியில் இருந்து தேஜஸ்வி யாதவும் ராஜினாமா செய்வார்களா என்று பாஜக தலைவர் அமித் மாளவியா கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் அமித் மாளவியா, "2020க்குள் கட்டி முடிக்க வேண்டிய இந்தப் பாலத்தை 2015-ல் நிதீஷ் குமார் திறந்து வைத்தார். இந்தப் பாலம் தற்போது இரண்டாவது முறையாக இடிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து நிதிஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் உடனடியாக ராஜினாமா செய்வார்களா?. இதைச் செய்வதன் மூலம் மாமா மற்றும் மருமகன் இருவரும் நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்க முடியும் ”என்று கூறியுள்ளார்.

பாலம் இடிந்து விழுந்தது குறித்து பீகார் எதிர்க்கட்சி தலைவர் விஜய் குமார் சின்ஹா பேசுகையில், “கமிஷன் கோரும் பாரம்பரியம் இவர்கள் ஆட்சியில் தொடர்ந்து வருகிறது. இந்த மோசமான மனநிலையால் தான் நிர்வாக அராஜகமும், ஊழலும் அதிகமாக நிலவுகிறது ”என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.