இந்தியா

வேற்று சாதிக்காரருடன் திருமணம்! மாப்பிள்ளையைச் சுட்டுக் கொன்ற மாமனார்

வேற்று சாதிக்காரருடன் திருமணம்! மாப்பிள்ளையைச் சுட்டுக் கொன்ற மாமனார்

ச. முத்துகிருஷ்ணன்

பீகார் மாநிலத்தில் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக மகள் வேற்று சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், ஆத்திரமடைந்த தந்தை பட்டப்பகலில் சலூனில் மாப்பிள்ளையை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள தும்ராவ்ன் கிராமத்தில் வசித்து வருபவர் சுனில் பதக். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரது மகள் அதே ஊரைச் சேர்ந்த உள்ளூர் நகராட்சி கவுன்சிலர் சோனு ராயின் சகோதரர் மோனு ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மோனு ராய் வேற்று சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தந்தை சுனில் பதக் சம்மதமில்லாமல் இந்த திருமணம் ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது.

தம்பதியர் இருவரும் இணைந்து வாழத் துவங்கி ஒரு வருடம் கழிந்த பிறகும், தந்தை சுனிலின் ஆத்திரம் குறையாமல் இருந்துள்ளது. தக்க சமயம் எதிர்பார்த்து காத்திருந்த அவர், மகன் தனு பதக் உதவியுடன் சலூன் கடையில் வைத்து தன் மருமகனை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர். கையில் துப்பாக்கியுடன் தனு சலூன் கடையில் காத்திருக்க, நிகழப்போவது என்னவென்று அறியாமல் மோனு ராய் சீட்டில் வந்து அமர, முடி திருத்துநர் அவருக்கு முடி வெட்ட துவங்கினார்.

திடீரென கையில் இருந்த தனுவின் துப்பாக்கியில் இருந்து மோனுவின் தலையில் ஒரு தோட்டாவை செலுத்த, மோனு ராய் மற்றும் முடி திருத்துநர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் சுதாரித்து எழுந்து கடையை விட்டு மோனு வெளியே ஓட முயற்சிக்க, அப்போது அங்கு வந்த சுனில், மோனுவை தடுத்து கடைக்குள் இழுத்துச் சென்றார். பின்னர் இருவரும் மோனுவின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை காலால் உதைத்து துன்புறுத்தினர்.

ரத்த வெள்ளத்தில் சலூன் கடையிலேயே மோனுவின் உயிர் பிரிந்தது. நிகழ்ந்த இந்த கொடூரச் சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தனது துப்பாக்கியுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்தார் சுனில். அவர் மகன் மட்டும் தப்பி ஓடியதால் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் ஒரு வருட காலம் காத்திருந்து பட்டப்பகலில் ஆணவக் கொலையை நிகழ்த்தியிருப்பது அப்பகுதியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.