bihar twitter
இந்தியா

விபத்தில் உயிரிழந்த நபரை ஆற்றுக்குள் வீசிய போலீசார்.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்; வைரலாகும் வீடியோ!

பீகாரில் சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை, அங்குள்ள ஆற்றில் போலீசார் வீசிச் செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள பகுலி தேசிய நெடுஞ்சாலையில், டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். அந்த நபரின் சடலம் அப்படியே சாலையில் கிடந்ததையடுத்து, அவ்வழியாகச் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை அப்புறப்படுத்தினர். ஆனால், அந்தச் சடலத்தை முறைப்படி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் போலீசாரே, அருகில் இருந்த ஆற்றுக்குள் வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதை அவ்வழியாகச் சென்ற ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இதையடுத்து, பீகார் போலீசார் மீது விமர்சனங்களும் கண்டனங்களும் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, ஆற்றில் வீசிய சடலத்தை எடுத்த போலீசார், பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், இந்த சம்பவம் குறித்த முதலில் விளக்கம் அளித்த போலீசார், உயிரிழந்த நபரின் உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சாலையில் சிக்கி கிடந்த உடலின் சில பாகங்கள் மட்டுமே ஆற்றில் வீசப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: லடாக் கவுன்சில் தேர்தல்: காங்கிரஸ் - என்.சி கூட்டணி அபார வெற்றி.. கடுமையான தோல்வியைச் சந்தித்த பாஜக!

இதுகுறித்து அவர்கள், ’இது மிகவும் மோசமான விபத்து. இதில் அந்த நபரின் அனைத்து உடல் உறுப்புகளும் மிகவும் மோசமாகச் சேதமடைந்தன. எதையும் மீட்டெடுக்க முடியவில்லை. அதனால்தான் அப்புறப்படுத்தி ஆற்றுக்குள் வீசினோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் குமார், ’இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக ஓட்டுநர் கான்ஸ்டபிளை இடைநீக்கம் செய்துள்ளோம். மேலும், பணியில் இருந்த இரண்டு ஊர்க்காவல் படை வீரர்களின் ஒப்பந்தத்தையும் நிறுத்திவைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ’மரண ஓலங்கள்’ - இஸ்ரேல் இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதல்; சிதறிக்கிடந்த 260 பேரின் சடலங்கள்!