பீகாரில், தடுப்பூசி விநியோகத்தின் போது, அவசரத்தில் அலட்சியமாக மருந்தற்ற வெற்று ஊசியை அசார் என்ற நபருக்கு செலுத்தியுள்ளார் செவிலியரொருவர். இது வீடியோவாக வெளிவந்து, அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில், சப்ரா என்ற பகுதியில், இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு தடுப்பூசி மையத்தில், ஜூன் 21 ம் தேதி இது நடந்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஊசி போடுவதை, வேடிக்கையாக வீடியோ எடுத்துள்ளார், உடன் சென்றிருந்த அவரின் நண்பர். வீட்டுக்குத் திரும்பிய பின், வீடியோவை பார்த்தபோதுதான் அவர்களுக்கே விஷயம் தெரிந்துள்ளது.
சமூகவலைதளத்தில், இதை அவர்கள் எதார்த்தமாக ஷேர் செய்ய, பலரும் அந்த செவிலியருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, அச்செவிலியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, வலியிறுத்துகின்றனர் பலர்.
சந்தா குமாரி என்ற 48 வயது மதிக்கத்தக்க அந்த செவிலியரை பணிநீக்கம் செய்ததோடு, அடுத்த 48 மணி நேரத்துக்குள் இதற்கான விளக்கத்தை அளிக்க மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி அஜய்குமார் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், அச்செவிலியர் வேண்டுமென்றே இதை செய்யவில்லை என்றும், அந்த இடத்தில் நிறைய பேர் கூடியிருந்த காரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தில், தவறுதலாகவே அவர் செய்திருப்பார் என்றும் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான இடமென்பதால் இந்த தவறு நடந்திருக்குமென்றும், அதனால் அவருக்கு கடுமையான நடவடிக்கைகளை தரவேண்டாமென்றும் ஊசி போட்டுக்கொண்ட அசாரும் விளக்கம் அளித்திருக்கிறார். அசார், வேறொரு நாளில் அவரின் விருப்பத்திற்கேற்ப ஊசி போட்டுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.