வீட்டில் ஏகே 47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த சுயேச்சை எம்.எல்.ஏ, போலீசார் கைது செய்ய வந்தபோது தப்பியோடினார்.
பீகார் மாநிலம் மோகாமா ( Mokama) தொகுதி எம்.எல்.ஏ ஆனந்த் குமார் சிங். சுயேச்சை எம்.எல்.ஏவான இவரது மூதாதையர் வீடு, அதே மாவட்டத்தின் லட்மா கிராமத்தில் உள்ளது. அங்கு ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 26 தோட்டாக்களுடன் கூடிய ஏ.கே.47 துப்பாக்கி, 2 வெடிகுண்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ ஆனந்த சிங் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. ’சோட்டா சர்கார்’, மோகாமா டான் என்ற பட்டப் பெயர்களுடன் அழைக்கப்படும் அவர், சோதனை நடந்தபோது வீட்டில் இல்லை. இந்நிலையில் அவர் மீது, பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய போலீசார் நேற்று இரவு அவர் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அதற்கு முன்பே அவர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதுபற்றி போலீசார் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘’எம்.எல்.ஏவின் மனைவியிடம் விசாரித்தோம். அவர், எம்.எல்.ஏ. பற்றிய எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவருகிறார். அதனால் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க இருக்கிறோம்’’ என்றார்.