நடுவில் அபிஷேக் குமார் எக்ஸ் தளம்
இந்தியா

ரூ.2 கோடி சம்பளம்.. லண்டன் கூகுள் நிறுவனத்தில் வேலை.. பீகார் இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!

Prakash J

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள ஜமு காரியா கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் குமார். இவருடைய தந்தை இந்திரதேவ், ஜமுய் சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். தாயார், மஞ்சுதேவி இல்லத்தரசியாக உள்ளார். ஆரம்பக் கல்வியை ஜமுய்யில் முடித்த அபிஷேக், அதன்பின்னர் என்ஐடி பாட்னாவில் மென்பொருள் பொறியியலில் பட்டம் பெற்றார். 2022ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனத்தில் ரூ.1.08 கோடி சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தார். அதை, கடந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் உதறித் தள்ளிய அபிஷேக், அடுத்து ஜெர்மன் முதலீட்டு நிறுவனத்தின் அந்நியச் செலாவணி வர்த்தக பிரிவில் சேர்ந்தார். இந்த நிலையில், அவர் லண்டனில் உள்ள கூகுள் நிறுவனத்தில் ரூ.2 கோடி சம்பளத்திற்கு பணியில் சேர உள்ளார். அடுத்த மாதம் முதல் அவர் பணியைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அபிஷேக் குமார், “எல்லாமே சாத்தியம்தான். ஒருவர் எந்த இடத்தில் இடத்தில் இருந்தாலும் அவர்கள் சரியாகத் திறம்படச் செயலாற்றினால் மிகப்பெரிய வாய்ப்புகளைப் பெற முடியும். இந்த அளவுக்கு நான் வளர்வதற்குக் காரணம், கல்வி மட்டுமே. அதில் நான் முழுக் கவனம் செலுத்தினேன். அதற்கேற்ப எனது குடும்பத்தினரும் ஆதரவு அளித்தனர்.

நான் இந்த நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் வெற்றிபெறுவதற்கு முன்னர், வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அப்போது இந்த நேர்காணலுக்காக என்னை தயார் செய்வது பெரிய சவாலாக இருந்தது. இதற்காக என் பணி நேரத்தை (8-9 மணி நேரம்) அதிகரிக்க வேண்டியிருந்தது. மீதமுள்ள நேரத்தில்தான் என்னை தயார்படுத்திக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: NZ Vs SL | 16 ஆண்டுகளுக்குப் பிறகு 6 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி.. என்ன காரணம் தெரியுமா?