இந்தியா

”செத்தாலும் கவலையில்லை..”.. 2 கிட்னிகளை இழந்த பெண்ணை நிர்கதியாக விட்டுச் சென்ற கணவர்!

”செத்தாலும் கவலையில்லை..”.. 2 கிட்னிகளை இழந்த பெண்ணை நிர்கதியாக விட்டுச் சென்ற கணவர்!

JananiGovindhan

சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவரே திருடிய சம்பவம் பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

பீகாரின் முசாஃபர்புர் மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா தேவி (38) என்ற பெண் தனது வயிறு வலி இருந்ததால் பரியாப்பூரில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்கு சென்றிருக்கிறார். அங்கு சுனிதாவை பரிசோதித்த மருத்துவர், கர்ப்பப்பையில் இருக்கும் தொற்று நீக்க சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனச் சொல்லி கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி அதே க்ளினிக்கில் அனுமதித்து, சுனிதாவுக்கே தெரியாமல் அவரது இரு கிட்னியையும் அகற்றியிருக்கிறார்கள்.

ஆபரேஷனுக்கு பிறகு வீடு திரும்பிய சுனிதாவுக்கு முன்பை காட்டிலும் அதீத வயிற்று வலி வந்ததால் முசாஃபர்புரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்த போதுதான் தன்னுடைய இரு சிறுநீரகங்களும் திருடப்பட்டதை அறிந்திருக்கிறார்.

இதனையடுத்து தினமும் டையாலிசிஸ் செய்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதால் மருத்துவமனையிலேயே தங்கிய சுனிதாவுக்கு நாள்தோறும் டையாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே கிட்னிகளை திருடிய அந்த மருத்துவர் ஆர்.கே.சிங் போலி சான்றிதழை கொடுத்தது அம்பலமானதோடு, அந்த க்ளிக்கும் சட்டப்படி பதிவு செய்யாமல் இருந்தும் தெரிய வந்தது. இதனையடுத்து மருத்துவமனை உரிமையாளர் கடந்த நவம்பர் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான சுனிதா தேவியும் அவரது கணவரும் கூலித் தொழில் செய்தே தங்களது வாழ்வாதாரத்தை பார்த்து வந்திருக்கிறார்கள். ஆனால் போலி மருத்துவரால் அவர்களது வாழ்க்கையே ஸ்தம்பித்து போயிருந்திருக்கிறது.

இதுவரை சுனிதாவுக்கு பொருந்தும் வகையிலான கிட்னி தானம் கொடுப்பவர்களை மருத்துவமனை சார்பிலும் அணுகிய போது எதுவும் ஒத்துவராமலேயே இருந்திருக்கிறது. இந்த நிலையில், கிட்னியை இழந்த சுனிதா தேவியின் கணவரோ தற்போது அந்த பெண்ணுடன் வாழ மாட்டேன் என்றும் அவருக்கு உறுதுணையாக இருக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டு சென்றிருக்கிறாராம்.

இது குறித்து பேசியுள்ள பாதிக்கப்பட்ட அந்த சுனிதா தேவி, “எனக்கு 3 குழந்தைகள் உள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மரணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் இப்போது என் கணவர் என்னை விட்டு சென்றுவிட்டார். உன்னோடு வாழ்வது ரொம்பவே சிரமம். இரு உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை எனக் கூறிவிட்டார்” என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.