பீகார் மாநிலம் ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 26). இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இவரது மனைவியை காண ஒரு நபர் அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இதை கவணித்த ராஜேஷ், ஒருநாள் அந்நபரை பிடித்து விசாரித்துள்ளார்.
அப்போது அவர், “என் பெயர் சாந்தன். நானும் உங்கள் மனைவியும் உங்கள் திருமணத்துக்கு முன்பு சிறுவயதிலிருந்தே ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம். ஆகையால் தினமும் அவரை காண வருவேன். சில நேரம் இரவிலும் கூட உங்கள் வீட்டிற்கு வந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ராஜேஷ், தனது மனைவிக்கும் அவரின் காதலனுக்கும் ஊரார் முன்னிலையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
அதற்கேற்றார்போல கிராம மக்கள் முன்னிலையில் உள்ளூர் கோவிலில் இவர்களுக்கு திருமணம் செய்துவைத்துள்ளார். மேலும் ராஜேஷின் பெற்றோருக்கும் இவர்களின் திருமணத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட பெண் (ராஜேஷின் மனைவி) அளித்த பேட்டியில், “நான் என் முன்னாள் கணவருக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருப்பேன். தற்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இனி என் புது கணவருடனேயே நான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜேஷ் தன் இரண்டு வயது குழந்தையை தானே இனி கவனித்து கொள்வதாக தெரிவித்துள்ளாராம். இதுபற்றி ராஜேஷின் தாய், “என் பேரன்தான் எனக்கும் என் மகனுக்கும் எல்லாமுமே... ஆகவே நாங்கள் அவனை கவனித்துக்கொள்வோம்” என்றுள்ளதாக தெரிகிறது.
ராஜேஷ் ஊடகங்களிடையே தெரிவிக்கையில், “அவர்கள் இருவரும் மிகவும் தீவிரமாக ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். அடிக்கடி பேசிக் கொண்டிருந்துள்ளனரும்கூட. அதனால்தான் அவர்களை சேர்த்து வைக்க நான் முடிவுசெய்தேன். அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்க நான் அவர்களுக்கு உதவினேன்... நான் அவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.