இந்தியா

திருமண மேடையிலேயே சுருண்டு விழுந்து இறந்த மணமகன்.. காவு வாங்கிய DJ கச்சேரி!

திருமண மேடையிலேயே சுருண்டு விழுந்து இறந்த மணமகன்.. காவு வாங்கிய DJ கச்சேரி!

JananiGovindhan

இளம் வயதிலேயே மாரடைப்பு காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த உடல்நல பாதிப்பும், மது, புகை போன்ற பழக்கங்களுக்கு ஆளாகாதவர்களும் திடீர் மாரடைப்பால் இறக்கின்றனர்.

இந்த நிலையில், திருமண மேடையில் இருந்த மணமகன் அதீத இசை சத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம் பீகாரில் நடந்திருக்கிறது. அதன்படி பீகாரின் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேந்ர குமார். அவருக்கு வயது வெறும் 22 தான்.

கடந்த மார்ச் 1ம் தேதி மணப்பெண்ணின் இந்தர்வா கிராமத்தில் திருமண நிகழ்வுகள் கோலாகலமாக நடந்திருக்கிறது. வரவேற்பு ஊர்வலம் முடிந்து மணமேடைக்கு வரமாலை சடங்குக்காக திரும்பியிருக்கின்றனர் மணமக்கள்.

அப்போது மணமேடைக்கு அருகே DJ இசை கச்சேரி நடத்தப்பட்டிருக்கிறது. இந்த DJ-ன் போது அதிக ஒலியுடன் பாடல்கள் இசைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அசவுகரியமாக உணர்ந்த மணமகன் சுரேந்தர் குமார் முதலில் இசையின் அளவை குறைக்கச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதனை செய்யாமல் தொடர்ந்து அதிக சத்தத்துடனேயே DJ இசைக்கப்பட்டதால் தலைசுற்றல் ஏற்பட்டதோடு நெஞ்சு வலிப்பதாகவும் சுரேந்தர் கூறியிருக்கிறார். இதனையடுத்த நொடியே மேடையில் சுருண்டு விழுந்திருக்கிறார்.

இதனைக் கண்ட அங்கிருந்த விருந்தினர்கள், குடும்பத்தினர் சுரேந்தரை உடனடியாக அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேந்தர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.

DJ கச்சேரியால் மாரடைப்பு ஏற்பட்டு 22 வயதே ஆன மணமகன் உயிரிழந்த பரிதாப நிகழ்வை அடுத்து, DJ கச்சேரிக்கு தடை இருக்கும் போது ஏன் அதனை நடத்தியதாக சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதனிடையே திருமண நாளன்றே மணமகன் அதிக இசையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதும் இணைய வாசிகள் பலரும் மணமகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், திருமண நிகழ்வுகளில் நடத்தப்படும் இதுப்போன்ற DJ நிகழ்ச்சியை முற்றிலும் தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.