இந்தியா

தந்தையை பின்னால் அமரவைத்து 1200கிமீ சைக்கிளில் பயணம் செய்த 15 வயது சிறுமி

webteam

காயமடைந்த தன் தந்தையை 1200கிமீ சைக்கிளில் வைத்து அழைத்துக்கொண்டு, 15 வயது சிறுமி ஒருவர் வீடு வந்து சேர்ந்துள்ளார்.

பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். பீகாரில் 5 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்த இவர் டெல்லியில் ரிக்‌ஷா ஓட்டி தொழில் செய்துள்ளார். சிறிய விபத்து மூலம் ரிக்‌ஷா ஓட்ட முடியாமல் இருந்துள்ளார் மோகன், எனவே அவரைக் கவனிக்க அவரது மூத்த மகள் ஜோதி (15) டெல்லிக்குச் சென்றுள்ளார். ஜோதி டெல்லி சென்ற நேரமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு்ள்ளது. வேறு வழியின்றி தந்தையுடன் டெல்லியில் தங்கியுள்ளார்.

தந்தைக்கு வருமானம் இல்லாத நிலையில் அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிடலாம் என ஜோதி நினைத்துள்ளார். ஆனால் போக்குவரத்து ஏதும் இல்லாமல் 1200கிமீ பயணம் செய்வது எப்படி? வீட்டில் இருக்கும் தாயின் நகைகளை அடகு வைத்து அதன்மூலம் பணம் பெற்ற ஜோதி புதிதாக சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். தன் தந்தையை பின்னால் அமர வைத்துக்கொண்டு தன்னுடைய நீண்ட பயணத்தை தொடங்கியுள்ளார் ஜோதி.

இது குறித்து தெரிவித்த மோகன், சைக்கிளின் பின்னாள் என்னை அமரவைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் செல்வது கடினம் எனக் கூறினேன். ஆனால் அவள் முடியுமென்று தீர்க்கமாக கூறி விட்டாள். எல்லாவற்றையும் நான் விதி வசம் விட்டுவிட்டேன் எனக் கூறியுள்ளார். வழியில் கிடைக்கும் உணவை உண்டுகொண்டு கிட்டத்தட்ட 8 நாட்கள் கடந்து தன் தந்தையை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார் ஜோதி. நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றை தன் தைரியத்தின் மூலம் சாதித்துக்காட்டியுள்ள ஜோதிக்கு பல தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.  அதே நேரத்தில் இப்படியான நிலையை அரசு ஏற்படுத்தியிருக்கக் கூடாது என்றும், இது அரசின் தோல்வி எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

இதனிடையே ஜோதியின் சைக்கிள் ஓட்டும் திறனால் ஆச்சரியம் அடைந்துள்ள இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு, தேசிய அளவிலான சைக்கிள் பந்தயத்துக்கு ஜோதியை தயார்படுத்த திட்டமிட்டுள்ளது. ஊரடங்கிற்கு பின்னர் அதற்கான பயிற்சியும் ஜோதிக்கும் அளிக்கப்பட உள்ளது.