பீகார் எக்ஸ் தளம்
இந்தியா

பீகார்|’இதுக்கு முடிவேயில்லையா’ சம்பளம் கேட்ட பட்டியலின இளைஞரை கொடூரமாக தாக்கி சிறுநீர் கழித்த அவலம்

Prakash J

என்னதான் இந்தியாவில் கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் இருந்தாலும் சாதிய ரீதியான தாக்குதல்கள் மட்டும் அவ்வப்போது நாடு முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான் பீகாரில் அரங்கேறி உள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூரின் சௌபர் மதன் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ் படேல். மிராசுதாரரான, இவர் சொந்தமாக கோழிப்பண்ணையும் வைத்துள்ளார். இந்தக் கோழிப்பண்ணையில் அதே ஊரைச் சேர்ந்த ரிங்கு மஞ்சி என்பவர் தினக்கூலியாக வேலை செய்துவந்துள்ளார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தன்னுடைய மீதிச் சம்பளத்தை ரமேஷ் படேலிடம் ரிங்கு மஞ்சி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், தனது சகாக்களுடன் சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளார்.

இதையும் படிக்க: இலக்கியத்திற்கான நோபல் பரிசு| தென்கொரிய எழுத்தாளருக்கு அறிவிப்பு.. யார் இந்த ஹான் காங்?

மேலும் ரமேஷின் மகன் மற்றும் இன்னொருவர் ரிங்குமீது எச்சில் துப்பியுள்ளனர். மேலும் ரமேஷின் மகன், ரிங்கு மீது சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். தவிர, ஜாதிரீதியாகவும் அவரைத் துன்புறுத்தியுள்ளனர்.

விசாரணையில் பாதிக்கப்பட்ட ரிங்கு, பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, செல்போனில் ரகசியமாக படமாக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இருவர், ரிங்குவை தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இந்தப் பாதிப்புக்குப் பிறகு ரிங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுதொடர்பாக புகார் கிடைத்தவுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, முசாபர்பூரில் மற்றொரு வழக்கில், மோட்டார் சைக்கிள் திருடியதற்காக இரண்டு பட்டியலின ஆண்களை சிலர் கடுமையாக தாக்கி சிறுநீர் கழித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கிராமப்புற கண்காட்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: காற்றில் கலந்த உயிர் | ”ஒரு போரால் எங்கள் காதல் முறிந்தது”.. வைரலாகும் ரத்தன் டாடாவின் காதல் கதை!