தியாகி, நிதிஷ்குமார் எக்ஸ் தளம்
இந்தியா

பீகார்: நிதிஷ்குமார் கட்சியிலிருந்து மூத்த தலைவர் பதவி விலகல்.. பாஜகவின் அழுத்தம் காரணமா?

Prakash J

பீகாரில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியு கட்சி, ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.சி.தியாகி நேற்று திடீரென ஜேடியு கட்சியில் இருந்து விலகியிருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர், தன் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, அவருக்குப் பதிலாக ராஜீவ் ரஞ்சன் பிரசாத் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக கே.சி.தியாகி இந்த முடிவை எடுத்ததாக கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் முக்கியப் பிரச்னைகள் குறித்து கே.சி.தியாகி எதிராக அறிக்கைகள் விட்டதே, அவர் பதவியை ராஜினாமா செய்வதற்குக் காரணம் எனத் தகவல் சொல்லப்படுகிறது. அதாவது, சில முக்கிய விவகாரங்களில் தலைமையின் அனுமதி இல்லாமல் கே.சி.தியாகி அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்துகொண்டே அக்கட்சியை விமர்சிப்பது என்பது நிதிஷுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து பாஜகவும் நிதிஷிடம் எடுத்துக் கூறியுள்ளது. அந்த வகையிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. என்றாலும், பாஜகவின் அழுத்தம் காரணமாகவே தியாகியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்யச் சொன்னதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், இதை அக்கட்சி வட்டாரங்கள் மறுத்துள்ளன. "பாஜகவிடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை. நிதிஷ்குமார் தானாகவே முன்வந்து இந்த முடிவை எடுத்தார்" என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, பொது சிவில் சட்டம், மல்யுத்த வீரர் வினேஷ் போகட் ஒலிம்பிக் விவகாரம், லேடரல் என்டரி, இஸ்ரேல்- ஹமாஸ் போர் உள்ளிட்ட விஷயங்களில் கே.சி.தியாகி மத்திய அரசை விமர்சித்து கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜினாமா குறித்து கே.சி.தியாகி, “தேசிய செயற்குழு கூட்டத்தின்போது எனக்கு மீண்டும் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மற்றும் அதன் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டது, ஆனால் இப்போது வயது காரணமாக இந்த வேலையை என்னால் செய்ய முடியாது. என்றாலும், ஜேடியுவில் நான் ஆலோசகராக இருப்பேன். நிதிஷ்குமார் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். அவருக்கும் எனக்கும் நீண்டகால உறவு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.