நிதிஷ்குமார் எக்ஸ் தளம்
இந்தியா

பீகார் | சட்டப்பேரவையில் பெண் எம்.எல்.ஏ.விடம் கோபப்பட்ட முதல்வர்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பெண் எம்.எல்.ஏவை அவமரியாதையாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் இணைந்து ஆட்சியில் உள்ளது. ‘இக்கட்சிதான் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது என்பதால்தான் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பட்ஜெட்டில் பீகாருக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது’ என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இடஒதுக்கீடு விவகாரம், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து ஆகிய விவகாரங்களில் நிதிஷ்குமார் தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

பீகார் சட்டப்பேரவை

குறிப்பாக, இடஒதுக்கீட்டை 65 சதவிகிதமாக உயர்த்திய நிதிஷ் குமார் அரசின் முடிவை ரத்துசெய்து பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்னைகளை இன்று கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க:விவாகரத்திற்குப் பிறகு மகனுடன் நடாஷா வெளியிட்ட படம்.. ஹர்திக் பாண்டியா போட்ட ரியாக்‌ஷன்!

இதுதொடர்பாக அவையில் பேசிய நிதிஷ் குமார், “பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய சில நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்” எனப் பதிலளித்தார். ஆனாலும் நிதிஷ்குமாரின் பதிலால் திருப்தி அடையாத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

அப்போது இவ்விவகாரம் தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் பெண் எம்.எல்.ஏ ரேகா பஸ்வான் நிதிஷ்குமாரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். இதனால் கோபப்பட்ட நிதிஷ்குமார், “நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு என்ன தெரியும், அமைதியாக உட்கார்ந்து கேளுங்கள்? நீங்கள் தேவையில்லாத விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் (ஆர்ஜேடி) பெண்களுக்காக என்ன செய்தீர்கள்? 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு, எனது அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து இடஒதுக்கீடு வேலையை செய்தோம். என் அரசில்தான் பெண்கள் உரிமையைப் பெற்றார்கள். அதனால்தான், நான் சொல்கிறேன். அதனை அமைதியாக கவனியுங்கள், கவனிக்காவிட்டால் அது உங்களின் தவறுதான்” எனக் கூறினார்.

பெண் எம்.எல்.ஏவை அவமானப்படுத்திய முதல்வர் நிதிஷ்குமாரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. நிதிஷ்குமாரின் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பீகார் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், “நிதிஷ்குமாரின் பேச்சு தரம் தாழ்ந்தது. இதுபோன்று பேசுவது நிதிஷ்குமாருக்கு வாடிக்கையாகிவிட்டது. இது மிகவும் தீவிரமான மற்றும் கவலைக்குரிய விஷயமாகும்.

தேஜஸ்வி யாதவ்

சில நாட்களுக்கு முன்னால் பாஜகவைச் சேர்ந்த பழங்குடியின பெண் எம்எல்ஏவின் அழகு பற்றி இழிவான முறையில் பேசினார். தற்போது ஒரு பட்டியலின பெண் எம்.எல்.ஏ குறித்து தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரேகா பஸ்வான், “9வது அட்டவணையில் இடஒதுக்கீடு ஏன் நீக்கப்பட்டது என்று நாங்கள் கேட்டோம். கூட்டணி எம்எல்ஏக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால், முதல்வர் நிதிஷ்குமார் அவையில் கோபமடைந்தார்.

ரேகா பஸ்வான்

முதல்வர் நிதிஷ்குமார் ஒரு பெண் மீது இவ்வளவு கோபப்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களின் குரலை நசுக்கவே முதல்வர் சபையில் இப்படி பேசுகிறார் எனத் தோன்றுகிறது” என பேட்டியளித்துள்ளார்.

இதையும் படிக்க:அமெரிக்கா | அதிபர் தேர்தலிலிருந்து விலகியது ஏன்? ஜோ பைடன் விளக்கம்!