இந்தியா

பெகாசஸ் உளவு விவகாரம்: நிதீஷ் குமார் நிலைப்பாட்டால் பாஜக கூட்டணியில் சலசலப்பு

பெகாசஸ் உளவு விவகாரம்: நிதீஷ் குமார் நிலைப்பாட்டால் பாஜக கூட்டணியில் சலசலப்பு

நிவேதா ஜெகராஜா

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்திருப்பது, வட இந்திய அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் இத்தகைய கருத்தை வெளியிட்டு இருப்பது, அரசியல் ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போது டெல்லி அரசியல் வட்டாரங்களில் அலசப்பட்டு வருகிறது.

நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி, பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அரசு அமைத்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் இடங்களை கைப்பற்றி இருந்தாலும், நிதீஷ் குமாருக்கு முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து வரும் நிதீஷ் குமார், எதிர்க்கட்சிகளை போலவே பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் விசாரணை நடத்துவது சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுடைய சகோதரர் பசுபதி பாரஸ் சமீபத்தில் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பதை எதிர்க்கட்சிகள் நினைவுகூர்கிறார்கள். சீராக் பஸ்வானை புறந்தள்ளி, 5 லோக் ஜனசக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனி குழுவை அமைத்துள்ளார் பாரஸ்.

பொதுவாகவே தனது கருத்துக்களை அச்சமின்றி வெளியிடும் நிதிஷ் குமார், தற்போது பெகாசஸ் விசாரணை குறித்து பேசியதில் அரசியல் உள்ளர்த்தம் இருக்கலாம் என்பது எதிர்க்கட்சிகளின் கணிப்பு.

பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக இருந்த நிதீஷ் குமார், பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகிறார்கள். பின்னர் நிதீஷ் குமார் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் தற்போது ஆட்சி அமைத்து வருகிறார். இது பீகார் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு, மாற்றங்கள் நிகழ்வுகள் வியப்பு ஏதுமில்லை என கருத காரணமாக உள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா கட்சித் தலைவர்கள், குறிப்பாக லாலு யாதவின் மகன் தேஜஸ்வி பலமுறை நிதீஷ் குமார் பாஜக கூட்டணியை கைவிட்டு வெளியேறினால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆதரவளிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- கணபதி சுப்ரமணியம்