இந்தியா

‘நீட்’ எழுத 700 கி.மீ தூரம் பயணித்து வந்த மாணவர்; 10 நிமிடம் தாமதமானதால் அனுமதி மறுப்பு

‘நீட்’ எழுத 700 கி.மீ தூரம் பயணித்து வந்த மாணவர்; 10 நிமிடம் தாமதமானதால் அனுமதி மறுப்பு

JustinDurai
நீட் நுழைவுத்தேர்வு எழுதுவதற்காக 700 கி.மீ தூரம் பயணித்து வந்த மாணவர், 10 நிமிடம் தாமதமானதால் தேர்வெழுத அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார்.
பீகாரில் உள்ள தர்பங்காவில் வசிக்கும் யாதவ் என்ற மாணவர், 24 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து, இரண்டு பேருந்துகள் மாறி, சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தை கடந்து, நீட் நுழைவுத்தேர்வு எழுதுவதற்காக கொல்கத்தாவை அடைந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் 10 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.
இதன் காரணமாக கொல்கத்தாவின் கிழக்கே அமைந்துள்ள சால்ட் லேக் நகரில் உள்ள ஒரு பள்ளியின் தேர்வு மையத்திற்குள் நுழைய யாதவ் அனுமதிக்கப்படவில்லை.
 
"நான் அதிகாரிகளிடம் கெஞ்சினேன், ஆனால் நான் தாமதமாக வந்துள்ளதாக கூறி அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கியது. நான் மதியம் 1.40 மணியளவில் மையத்தை அடைந்தேன். மையத்திற்குள் நுழைவதற்கான கடைசி காலக்கெடு மதியம் 1.30 மணி ஆகும்.
நான் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தர்பங்காவில் முசாபர்பூர் செல்ல பஸ்ஸில் ஏறினேன். அங்கிருந்து பாட்னாவுக்கு ஒரு பேருந்தில் ஏறினேன். ஆனால் அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் பஸ் தாமதமானதால் எனது பயணத் திட்டம் மாறிவிட்டது. இதன் காரணமாகவே தேர்வு மையத்தை அடைய தாமதமாகி விட்டது. நான் என்னுடைய ஒரு வருடத்தை இழந்து விட்டேன்’ என்று பேட்டியளிக்கையில் கண்ணீர் மல்க யாதவ் கூறினார்.