நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில், சீட் கிடைக்காத விரக்தியில் சில கட்சி நிர்வாகிகள் பிற கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக எம்பி ஒருவர் காங்கிரஸில் இணைந்துள்ளார். பீகார் மாநிலம் முசாபர்பூர் தொகுதியின் சிட்டிங் எம்பியாக இருப்பவர் அஜய் குமார் நிஷாத். அவருக்கு, இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை.
அவருக்குப் பதிலாக ராஜ் பூஷண் நிஷாத்துக்கு சீட் வழங்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் அவர், கட்சியின் அனைத்து பதவிகளையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், அஜய் பாஜகவில் இருந்து விலகி இன்று காங்கிரசில் இணைந்தார். பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில் அவர், இன்று காங்கிரஸில் இணைந்தார்.
இதுகுறித்து அஜய் நிஷாத், ”கட்சியின் துரோகத்தால் அதிர்ச்சியடைந்தேன். தூக்கில் போடப்படும் நபருக்கு கூட கடைசி ஆசை என்னவென கேட்கப்படும். ஆனால், எனக்கு சீட் கிடையாது என முடிவானதற்கு முன் ஒருமுறைகூட அதுபற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை. இந்த தேர்தல் பணபலத்திற்கான தேர்தலாக இல்லாமல், ஜனங்களின் பலத்திற்கான தேர்தலாக இருக்கும்” என்று கூறினார்.
இதன்மூலம் காங்கிரஸில் இணைந்த மூன்றாவது சிட்டிங் எம்பி என்ற பெருமையை அஜய் குமார் நிஷாத் பெற்றார். முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் சுரு தொகுதி எம்பி ராகுல் கஸ்வானும், ஹரியானா மாநிலம் ஹிசார் தொகுதி எம்பி பிரிஜேந்திர சிங்கும் காங்கிரஸில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் உள்ள மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக பீகாரில் 40 தொகுதிகளில் 39-இல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.