இந்தியா

விடுமுறை கொடுக்காததால் கைகலப்பில் குதித்த காவலர்கள்

விடுமுறை கொடுக்காததால் கைகலப்பில் குதித்த காவலர்கள்

rajakannan

பீகார் மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக பயிற்சி பெண் போலீசார் உயிரிழந்த நிலையில், உயரதிகாரிகள் லீவு கொடுக்காததே காரணமென கூறி காவலர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். 

உயர் அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் அலுவலகம் மீது பயிற்சி காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காவலர்கள் வாகனங்களை அடித்து நொறுக்குவதும், பூந்தொட்டிகளை தூக்கி உடைப்பதும் என ஒரே பதட்டமாக உள்ளது. மேலும், தங்களிடம் உள்ள தடியை கொண்டு மூத்த அதிகாரிகளை காவலர்கள் சரமாரியாக அடிக்கின்றனர். இதனால், அங்கு பயங்கரமான கை கலப்பு ஏற்பட்டது. 

கோபத்தில் கொதித்தெழுந்த காவலர்கள் கலைக்கும் பொருட்டு, உயரதிகாரிகள் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கான்ஸ்டபிள்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. ஊடகங்களைச் சேர்ந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 300-க்கும் அதிகமான காவலர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள் விடுமுறை கேட்டிருந்ததாகவும் அதற்கு உயர் அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும், விடுமுறை கிடைக்காததால் அவரால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியவில்லை என்று அவருடன் பணியாற்றும் காவலர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, கலகத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி கூறியுள்ளார்.

போலீஸ் உயர் அதிகாரிகள் மீதே காவலர்கள் வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.