இந்தியா

“பீடி புகைப்பதால் ஆண்டிற்கு 80 ஆயிரம் கோடி செலவு” - பகீர் ஆய்வறிக்கை

“பீடி புகைப்பதால் ஆண்டிற்கு 80 ஆயிரம் கோடி செலவு” - பகீர் ஆய்வறிக்கை

webteam

இந்தியாவில் பீடி புகைப்பழக்கத்திற்காக மட்டும் ஆண்டிற்கு 80 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பீடி மிகவும் பிரபலமானது. இங்கு 15 வயதிற்குட்பட்டவர்கள் 72 மில்லியன் பேர் பீடி புகைப்பவர்களாக உள்ளனர். சிகரெட்டை விட பீடியில் நிக்கோட்டின் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் சுவாசக் கோளாறு ஏற்படுவதற்கு 69 சதவீதமும், நுரையீரல் மற்றும் குரல்வலை சம்பந்தமான நோய் வருவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

மருத்துவச் செலவினங்களுக்கான தேசிய மாதிரி கணக்கெடுப்பு விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய புகையிலை தடுப்பு அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில், புகைப்பிடிப்பதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் இறப்புகள் அதற்கான செலவினங்களை கணக்கிட்டு ஆய்வு மேற்கொண்டது.

இதுகுறித்து கேரளா, கொச்சி, பொது கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு எழுத்தாளர் ரிஜோ எம் ஜான் கூறுகையில், “இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 0.5 சதவிகிதமும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதத்திற்கும் மேலாகவும், பீடி புகைப்பழக்கத்தால் செலவிடப்படுகிறது. பீடி புகைப்பழக்கத்திற்காக மட்டும் ஆண்டிற்கு 80 ஆயிரம் கோடி மருத்துவத்திற்காக செலவு செய்யப்படுகிறது.

பரிசோதனை, மருந்து, மருத்துவர் கட்டணம், மருத்துவமனையில் தங்குவது, போக்குவரத்து செலவு என நேரடியாக இப்பணம் செலவிடப்படுகிறது. மறைமுகமாக, உறவினர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான விடுதி மற்றும் உணவுக்காக இவ்வளவு தொகை பணம் செலவிடப்படுகிறது. 

2016-17 ஆம் ஆண்டில் பீடி புகைப்பழக்கத்திலிருந்து பெறப்பட்ட வரி வருவாய் ரூ. 4.17 பில்லியன் வந்துள்ளதாகவும், இந்தியாவில் ஐந்து குடும்பங்களில் ஒரு குடும்பம் பீடி புகைப்பதினால் ஏற்படும் மருத்துவ செலவினங்கள் காரணமாக பேரழிவு செலவுகளை சந்திப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. 

இதனால் 63 மில்லியன் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். புகைப்பிடிப்பதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் இதில் அடங்கும். 15 மில்லியன் மக்கள் பக்க விளைவுகளினால் ஏற்படும் செலவினங்கள் காரணமாக வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். புகைப்பிடிப்பதை தடுக்கவில்லை என்றால் இன்னும் பல குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.