இந்தியா

சத்தீஸ்கர் முதலமைச்சராக பூபேஷ் பாகல் தேர்வு

சத்தீஸ்கர் முதலமைச்சராக பூபேஷ் பாகல் தேர்வு

Rasus

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக பூகேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா 15 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும் வெற்றி கண்டன. பெரும்பான்மைக்கும் அதிகமாக இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியதால் அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கிறது.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற குழப்பம் நீடித்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்து 6 நாட்களாக முதலமைச்சர் தேர்வு செய்யப்படாமல், கட்சிக்குள் இழுபறி நீடித்தது. இந்நிலையில் மொத்தம் உள்ள 68 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம், மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு செய்யப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன் கார்கே அறிவித்தார். 57 வயதான பூபேஷ் பாகல், கடந்த 5 ஆண்டுகாலமாக மாநில காங்கிரஸை வழிநடத்தி வந்தார். இந்நிலையில் தற்போது அவரது தலைமையில் ஆட்சி அமைய உள்ளது.

ராய்ப்பூரில் நாளை மாலை 4.30 மணிக்கு பூபேஷ் பாகல் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. முன்னதாக யார் சத்தீஸ்கரின் முதலமைச்சர் என்று காங்கிரஸில் குழப்பம் நீடித்தது. இதனையடுத்து கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் ராகுல்காந்தி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் பூபேஷ் பாகல் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றே ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் எனத் தெரிகிறது.