போபால் நகரைச் சேர்ந்தவர்கள் என்றாலே பொதுவாக ஓரினச் சேர்க்கையாளர்கள் என்ற கருத்து உள்ளதாக 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
காஷ்மீர் பண்டிட்டுகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை மையமாக வைத்து, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி எடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் தற்போது நாடு முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இத்திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்திருந்தார். அதில் அவர், "நான் மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவன் தான். ஆனால், யாரிடமும் அவ்வாறு சொல்வதில்லை. ஏனெனில், போபாலை சேர்ந்தவர்கள் என்றாலே பொதுவாக ஓரினச் சேர்க்கையாளர்கள் என்ற கருத்து இருக்கிறது. ஒருவேளை, அவர்களின் நவாபி ஸ்டைல் வாழ்க்கை முறையால் கூட அதுபோன்ற எண்ணம் வந்திருக்கலாம்" எனக் கூறினார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. குறிப்பாக, மத்திய பிரதேச மக்கள் மத்தியில் அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கூறுகையில், "விவேக் அக்னிஹோத்ரி, நீங்கள் சொல்வது உங்கள் சொந்த அனுபவமாக இருக்கலாம். ஆனால், அனைத்து போபால்வாசிகளுக்கு அது பொருந்தாது. உங்களுடன் இருக்கும் நபர்களை பொறுத்து கூட இந்த எண்ணம் உங்களுக்கு தோன்றியிருக்கலாம். இனி எச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள்" என்றார்.