போலே பாபா எக்ஸ் தளம்
இந்தியா

”பிறந்தால் ஒருநாள் சாகத்தான் வேண்டும்” - ஹாத்ரஸ் சம்பவம் குறித்து போலே பாபா சர்ச்சை பேச்சு!

உத்தரப் பிரதேச மாநில ஹாத்ரஸ் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஆசிரமம் திரும்பியுள்ள போலே பாபா தெரிவித்திருத்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில், கடந்த ஜூலை 2ஆம் தேதி ‘போலே பாபா’வின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்து அரங்கைவிட்டு போலே பாபா கிளம்பியபோது, அவரது காலில் விழுந்து ஆசிபெற அவரின் வாகனத்தைப் பின்தொடா்ந்த மக்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் மூச்சுத்திணறி பலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 120-ஐ கடந்தது. இச்சமபவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ளாத ஒருங்கிணைப்பாளா்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.

நிகழ்ச்சிக்கு 80,000 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அளவுக்கு அதிகமாக சுமாா் 2.5 லட்சம் போ் வரையில் கூட்டம் கூடியிருப்பதாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், போலே பாபாவின் பெயரே இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: விவாகரத்து பற்றிய இன்ஸ்டா பதிவு.. லைக் செய்த அபிஷேக் பச்சன்.. வதந்திகளுக்கு மறைமுக பதில்?

இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த போலே பாபா, தற்போது தனது மனைவி மற்றும் வழக்கறிஞருடன் மெயின்புரியில் உள்ள காஸ்கஞ்ச் ஆசிரமத்துக்குத் திரும்பியிருக்கிறார்.

ஆசிரமத்தில், ஹாத்ரஸ் சம்பவம் குறித்து அவர், ”யாராக இருந்தாலும் ஒருநாள் சாகத்தான் வேண்டும், யார் இந்த உலகில் பிறந்தாலும், அவர்கள் ஒருநாள் செத்துத்தான் ஆக வேண்டும். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், என் மீது பொறாமை கொண்ட சிலர்தான், நிகழ்ச்சி நடந்த இடத்தில் விஷ வாயுவைக் கசிய விட்டிருக்கிறார்கள். என் புகழுக்கு களங்கம் விளைவிக்கவே இது நடந்திருக்கிறது” என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: உத்தரகாண்ட்| கோயிலில் டிரம்ஸ் வாசிக்க மறுப்பு: பட்டியலின குடும்பங்களை ஊரைவிட்டே ஒதுக்கிய கொடூரம்!